கோவை: கோவை மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06030), வரும் ஜனவரி 28-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைதோறும், திருநெல்வேலியிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும்.
இதேபோல, மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06029), நாளை (ஜன.1) முதல் ஜனவரி 29-ம் தேதி வரை திங்கட்கிழமைதோறும், மேட்டுப்பாளையத்திலிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். செல்லும் வழியில், கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுதூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழகடயம், அம்பாசமுத்திரம், கள்ளிடைகுறிச்சி, சேரன்மாதேவி ஆகிய ரயில்நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.