டேஸ்பூர்: நாட்டின் எல்லைகளை மட்டுமல்லாமல், பாரதத்தின் கலாச்சார அடையாளத்தையும் பாதுகாப்பது மத்திய அரசின் பொறுப்பு என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜாந்த் சிங் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் உள்ள டேஸ்பூர் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா இன்று (டிச.31) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: 2014ஆம் ஆண்டுக்கு முன், இந்தியா அதிக பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்தது. ஆனால் இப்போது இந்த நாடு உலகின் முன்னணி 23 பாதுகாப்பு உபகரண ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக உள்ளது.
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு இலக்கை அடைவதற்கான அத்தனை முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். இந்தியாவை ஒரு உத்திரீதியான பொருளாதாரமாக மாற்றுவதற்கு நமது அரசாங்கம் உள்நாட்டு பாதுகாப்பு தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை வலுவாக உருவாக்கி வருகிறது.
நாங்கள் ஐந்து நேர்மறையான உள்நாட்டுமயமாக்கல் பட்டியல்களை வெளியிட்டோம். அதன் கீழ் 509 பாதுகாப்பு உபகரணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றின் உற்பத்தி விரைவில் உள்நாட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி முதன்முறையாக ரூ. 1 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. 2027ஆம் ஆண்டில் உலகின் மூன்று மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும். 2047-ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக நாம் இருப்போம். நாட்டின் எல்லைகளை மட்டுமல்லாமல், பாரதத்தின் கலாச்சார அடையாளத்தையும் பாதுகாப்பது மத்திய அரசின் பொறுப்பு” இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.