மதுரை: அரசு சார்பில் நடத்தப்படும் தமிழகத்தின் முதல் போட்டியான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தொடங்கின. பாலமேடு, அலங்காநல்லூரிலும் வாடிவாசல், கேலரிகள் அமைப்பதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழர்களின் பண்பாட்டையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள், தென் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும், மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக புகழ்பெற்றவை.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். அதேபோல், மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க பயிற்சி பெற்று வருகின்றனர். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும், பார்வையாளர்களுக்கான வசதிகளையும், பாதுகாப்பையும் செய்து கொடுப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் கடந்த 23-ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில் மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், மாநகராட்சி காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் வருவாய்துறை, கால்நடை பராமரிப்பு துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் விழா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அரசு சார்பில் நடத்தப்படும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் 15ம் தேதி பொங்கல் நாளில் நடைபெறுகிறது. 16ம் தேதி பாலமேடு, 17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் அடுத்தடுத்து நடக்க இருக்கின்றன. அவனியாபுரம் போட்டிக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து வருகிறது. அவனியாபுரத்தில் நிரந்தர வாடிவாசல், கேலரிகள் கிடையாது. அதனால், வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் கேலரி, மாடுகள் நிறுத்தப்படும் இடம், விழாவின் சிறப்பு விருந்தினர்கள் அமரும் விழா மேடை மற்றும் பார்வையாளர்களுக்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கான பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள மாநகராட்சி வரும் ஜனவரி 4ம் தேதி டெண்டர் விட உள்ளது. டெண்டர்கள் எடுப்போர், ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள், அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வார்கள். இந்த போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியில் பங்கேற்கும் தகுதியான காளைகளை தேர்வு செய்வதற்கான காளைகள் முன்பதிவு, மருத்துவப் பரிசோதனை விரைவில் தொடங்க இருக்கிறது. பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் நிரந்தரமாகவே உள்ளது. அதனால், வாடிவாசலையும், கேலரிகள் அமைப்பதற்கான இடத்தையும் தயார்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி நடக்கின்றன. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு ஆண்டும் வெற்றிப்பெறும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு கார், பைக், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிப்பெறும் வீரர், காளைகளுக்கு வழங்கப்படும் தங்க நாணயங்கள், பீரோ, கட்டில், வாஷிங் மிஷின், மிக்ஸி போன்ற பல்வேறு பரிசுகள் இந்த ஆண்டும் வழங்கப்பட உள்ளன.
மாநகராட்சி மேயர் இந்திராணி கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரிழப்பு, பெரிய காயம் ஏற்படவில்லை. அதுபோன்று வெற்றிகரமாக இந்த ஆண்டு காயமே ஏற்படாத ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. பார்வையாளர்கள் அமருவதற்கான பாதுகாப்பான கேலரிகள், கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படும். காயமடைந்தால் முதலுதவி சிகிச்சை வழங்குவதற்கான தற்காலிக மருத்துவமனைகள், மருத்துவக்குழுவினர் நியமிக்கும் பணிகள் நடக்க உள்ளது. சிசிடி காமிராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் போட்டிகள் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பணிகளை மேற்கொள்ள மாநகர பொறியாளர் தலைமையில், நகர் அலுவலர், சுகாதாரப் பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.50 லட்சம் செலவில் இப்பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.