திரையுலகமே திரண்டு கொண்டாடும் கலைஞர் 100 விழா, நாளை நடக்கிறது. சென்னை கிண்டியிலுள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் என்னென்ன ஸ்பெஷல், விஐபிக்கள் யாரெல்லாம் வருகை தரவிருக்கின்றனர் என்பது குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பூச்சி முருகன் இருவரும் நம்மிடம் பகிர்ந்த தகவல்கள் இனி…
‘‘அழைப்பிதழ்கள் கொடுக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இது ஒரு மாபெரும் விழா என்பதால் சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரேஸ் கோர்ஸ் மைதானம் திறந்தவெளி அரங்கம் என்பதால், அத்தனை பேருக்கும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். 22,500 பேருக்கு இருக்கைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. நாளை மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும். மொத்தம் ஆறு மணி நேரம் இந்த விழா நடக்கவிருக்கிறது.
தமிழ் சினிமாவின் அனைத்து சங்கங்களும் பங்கேற்பதால் ஒவ்வொரு சங்கங்களிலிருந்தும் பங்களிப்பு செய்ய உள்ளனர். கலைஞர் வசனம், கலைஞரின் பாடல்கள், கலைஞரை சினிமாவிற்கு ஆற்றிய பணிகள், அரிய தகவல்கள் அத்தனையும் இடம்பெறுகின்றன.
ரஜினி, கமல், விஜய் ஆகியோர் வரவிருக்கின்றனர். தெலுங்கில் சிரஞ்சீவி, மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் உட்பட பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். 40க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். நட்சத்திரங்கள் பங்கேற்கும் நடனங்களும் இருக்கின்றன. 20க்கும் மேற்பட்ட நடன இயக்குநர்கள் ஒத்திகை பார்த்து வருகின்றனர். கலை நிகழ்ச்சிகளை இயக்குநர்கள் சங்க டீம் கவனித்து வருகிறது. ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி என இயக்குநர்கள் நிறைய பேர் கவனித்து வருகின்றனர். கலைஞரைப் பற்றிய ஒளி – ஒலி காட்சிகளும் உள்ளன.
விழாவில் சமீபத்தில் மறைந்த விஜயகாந்திற்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்துகின்றனர். பொது மக்களுக்கு அனுமதி இலவசம் என்றாலும், முதல்வர் பங்கேற்கும் விழா என்பதால் இதற்கான அனுமதிச் சீட்டுக்கள் சினிமா சங்கங்கள் வழியே வழங்கப்பட்டு வருகின்றன. அதைப் போல, நெரிசல்கள் இல்லாமல் அனைவரும் ரிலாக்ஸாக அமர்ந்து விழாவைக் கண்டுகளிக்கும் விதமான, அனைத்து ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன’’ என்கிறார்கள்.