பெங்களூரு: கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 229 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கர்நாடக சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் 229 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,240 ஆக அதிகரித்துள்ளது. இதில் 199 பேருக்கு புதிய ஜே.என்.1 கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதித்த நோயாளிகள் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,168 பேர் அவர்களின் வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ”கரோனா தொற்று பரவலை தடுக்க கர்நாடகாவில் 60 வயதுக்கும் மேற்பட்டோர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நோயாளிகள், குழந்தைகளும் முக கவசம் அணிய வேண்டும். உடலின் வெப்ப நிலையை சோதித்த பிறகே பள்ளிக்குள் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது’ ‘என்றார்.