திருப்பூர் மாவட்டம், அவிநாசி லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், இன்ஸ்டாகிராமில் பெண் பெயரில் போலி கணக்கு உருவாக்கி, தனது நண்பர்களுடன் பெண்போல பேசி ஏமாற்றி வந்துள்ளார். இதில், அவரது நண்பரான வசந்தகுமார் உண்மையிலேயே பெண் என நினைத்து சிறுவனிடம் நீண்ட நாள்களாகப் பேசி வந்துள்ளார். இந்நிலையில், தன்னிடம் பெண்போல பேசிவருவது 17 வயது சிறுவன் என வசந்தகுமாருக்கு தெரியவந்துள்ளது.
சிறுவன் தன்னை ஏமாற்றியதை அறிந்து அவரது வீட்டுக்கே சென்று வசந்தகுமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சிறுவன், பழங்கரை அருகே உள்ள கள்ளுமடை பகுதியில் வசந்தகுமார் இருப்பதை அறிந்து அங்கு சென்றுள்ளார். ஆனால், வசந்தகுமார் அங்கு இல்லாத நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து சிறுவன் உள்ளிட்டோர் மது அருந்தி உள்ளனர். அப்போது, சிறுவனை அடித்தது குறித்து கேட்டபோது இரண்டு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது சிறுவன் மற்றும் அவரது நண்பர்களான ஜெயராம்(22), பாஸ்கரன்(22) ஆகிய மூவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோபி (24), சிவா(24) ஆகிய இருவரை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினர். உடன், இருந்த மற்ற நண்பர்கள் காயமடைந்த இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த அவிநாசி போலீசார் ஜெயராம், பாஸ்கர் ஆகிய இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சிறுவனை கைது செய்த போலீசார் கோவை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். இன்ஸ்டாகிராம் போலி கணக்கு கடைசியில் கொலை முயற்சி வழக்கில் முடிந்துள்ளது திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.