புதுடில்லி :பெங்களூரில், துணை நடிகருடனான தாக்குதல் சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட அவதுாறு வழக்கை எதிர்த்து, நடிகர் விஜய் சேதுபதி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
பிரபல நடிகர் விஜய் சேதுபதி, 2021ல் புதுடில்லியில் இருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூரு வழியாக விமானத்தில் சென்னை வந்தார்.
பெங்களூரு விமான நிலையத்தில், சென்னையைச் சேர்ந்த துணை நடிகர் மகா காந்திக்கும், விஜய்சேதுபதிக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இது தொடர்பாக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீது, அவதுாறாக பேசி தன்னை தாக்கியதாக மகா காந்தி புகார் அளித்தார்.
இதை எதிர்த்து விஜய் சேதுபதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்ற உயர் நீதிமன்றம் தாக்குதல் புகாரை ரத்து செய்ததுடன், அவதுாறாக பேசிய வழக்கை மூன்று மாதங்களில் முடிக்கும்படி, சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, அவதுாறு வழக்கை எதிர்த்து விஜய் சேதுபதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘இந்த விவகாரத்தில் நடிகராக கட்டுப்பாடுடன் இருந்திருக்க வேண்டும்.
‘இது தொடர்பாக உச்ச நீதிமன்ற மத்தியஸ்த மையத்தில் இருதரப்பும் பேச்சு வாயிலாக தீர்வு காணலாம்’ என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் மகேஸ்வரி, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேச்சு வாயிலாக தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அது தோல்வியில் முடிந்ததாக கூறப்பட்டதை அடுத்து, ‘அவதுாறு வழக்கை நடிகர் விஜய் சேதுபதி, அவர் மேலாளர் ஜான்சன் ஆகியோர் எதிர்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது’ எனக் கூறி, நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்