தென்காசி மாவட்டத்தை சேர்ந்த, நகராட்சி ஆணையாளர் ஒருவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “தென்காசி மாவட்டம் புளியங்குடி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ். கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி ஆணையாளராக உள்ளார்.
பணியில் இருக்கும்போது அரசு பணம் 15.62 கோடியை முறைகேடாக பயன்படுத்தியது, செய்யாத பணிக்கு ரூ.40 லட்சம் ஒப்புதல் அளித்து மோசடி செய்தது, சுகாதாரப் பணியாளர் நியமனம், டெண்டர் ஒதுக்கீடு ஆகியவற்றில் லஞ்சம் பெற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கோயம்புத்தூர் குற்றப்பிரிவு போலீஸால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ளார். இந்நிலையில் ஆணையாளர் பவுன்ராஜ், தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக, சொந்த ஊரில் வீடு, கார், நிலம், கார்மெண்ட்ஸ், செங்கல் சூளை, பேவர் பிளாக் கல் தயாரிப்பு ஆலை, தோட்டம், கால்நடை பண்ணை உள்பட பல்வேறு சொத்துகளை சேர்த்து வைத்திருப்பதாக தொடர் புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் ஆணையாளர் பவுன்ராஜுக்கு சொந்தமாக அய்யாபுரம், இந்திரா நகர், மங்கம்மாள் சாலை ஆகிய இடங்களில் உள்ள வீடு, கார்மெண்ட்ஸ், தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் தென்காசி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ஆணையாளர் பவுன்ராஜ் மற்றும் அவரது தாயார் ஆகியோரின் பெயர்களில் சுமார் 2.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்திருப்பது தெரியவந்தது. தான், முறைகேடாக சம்பாதித்த பணத்தில் வாங்கிய விலையுயர்ந்த பொருள்கள், அசையும், அசையா சொத்துகள் உள்ளிட்டவற்றை எந்த வருமான முகாந்திரமும் இல்லாத தாயார் பெயரிலும், தனது பெயரிலும் ஆணையாளர் பவுன்ராஜ் வாங்கி வைத்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர், முறைகேடாக சம்பாதித்த சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து ஆணையாளர் பவுன்ராஜ் மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் மதிப்பீட்டின்படி ஆணையாளர் பவுன்ராஜ் தனது வருமானத்தை காட்டிலும் 179 சதவீதம் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.