புதுடெல்லி,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இதனிடையே அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை கடந்த டிசம்பர் 30-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். விமான நிலைய முனையத்தின் முகப்பு கட்டிடம் அயோத்தி ராமர் கோவில் கட்டிடக்கலையை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயரை சூட்ட மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“பகவான் ஸ்ரீராமரின் புனித நகரமான அயோத்தியை முழு உலகத்துடன் இணைப்பதில் நமது அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக, அயோத்தியில் உள்ள விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதுடன், அதற்கு ‘மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், அயோத்தி தாம்’ என பெயரிடும் திட்டத்துக்கு மத்திய அமைச்சவை ஒப்புதல் அளித்துள்ளது. இது மகரிஷி வால்மீகிக்கு நாடு முழுவதும் உள்ள நமது குடும்ப உறுப்பினர்களின் சார்பாக நாம் செலுத்தும் மரியாதைக்குரிய அஞ்சலி.”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.