புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதோடு ஏதோஒரு போராட்டத்தின்போது அவர்கள் ஒன்றாக நடந்து செல்வது போன்ற பழைய புகைப்படத்தையும் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “எங்களுடைய நட்பு மிகவும் பழமையானது. எங்கள் பாசமும், நம்பிக்கையும் மிக வலுவானது” எனப் பதிவிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது எக்ஸ் தளத்தில், “எங்களுடைய நட்பு மிகவும் பழமையானது. எங்கள் பாசமும், நம்பிக்கையும் மிக வலுவானது. பொதுமக்களுக்காக உழைக்கும் இந்த வேட்கையும் மிக பழமையானது. சதிகாரர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் எங்களுடைய நம்பிக்கையும், பாசத்தையும், நட்பையையும் என்றும் உடைக்க முடியாது.
பாஜக கடந்த 11 மாதங்களாக பொய் வழக்குகள் போட்டு மணீஷ் சிசோடியாவை சிறையில் அடைத்துள்ளது. ஆனால் மணீஷ் சிசோடியா, அவர்களின் அடக்குமுறைக்கு முன்னால் உறுதியாக நிற்கிறார். அவர்களின் சர்வாதிகாரத்துக்கு இதுவரை பணிந்தது இல்லை, இனியும் தலைவணங்கப் போவதும் இல்லை. இந்த சர்வாதிகார காலத்தில், மணீஷின் தைரியம் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. பிறந்தநாள் வாழ்த்துகள் மணீஷ்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
விவரம் என்ன?: டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இந்தச் சூழலில் புதிய மதுபானகொள்கையின்படி மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கியது உட்பட பல்வேறு விவகாரங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமைச் செயலாளர் நரேஷ்குமார், டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் அறிக்கை அளித்தார். அதன்பேரில் சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார்.
கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி, அப்போதைய டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 36 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஊழல் தொடர்பாக மணீஷ் சிசோடியாவிடம் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது. இதன்தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். சிசோடியா ஜாமீன் கோரி பல முறை மனு தாக்கல் செய்த நிலையில், ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வருகிறது. அவரின் நீதிமன்ற காவலை ஜனவரி 10, 2024 வரை நீட்டித்து நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல், புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையின் சம்மன்களுக்கு ஆஜராகாததால் எந்த நேரத்திலும் கைது அவர் செய்யப்படலாம் என சலசலக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் இந்தியாவில் பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.