தமிழ்த் திரையுலகம் சார்பில் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்தும் `கலைஞர் 100′ விழா தற்போது நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்குபெற்றுள்ள இவ்விழாவிற்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த், கமல், சூர்யா, தனுஷ், நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டப் பலரும் வந்த வண்ணமிருக்கின்றனர்.
இவ்விழாவில் பேசிய நடிகர் தனுஷ், “கலைஞரின் அரசியல் மற்றும் சினிமா சாதனைகளைப் பற்றிப் பேச எனக்கு வயதோ அனுபவமோ கிடையாது. ஒரு படத்தோட பூஜைக்காக பத்திரிகை வைக்க கலைஞர் வீட்டுக்குப் போயிருந்தேன். ‘வாங்க மன்மத ராசா’ன்னு கூப்பிட்டாரு. நம்ம பாட்ட இவர் கேட்டுருக்காரான்னு ஆச்சர்யமா இருந்துச்சு.
அந்தப் பத்திரிகைல ரெண்டு கெட்டப் இருக்கும். ஒண்ணு கிராமத்து கெட்டப். இன்னொன்னு சிட்டி கெட்டப். அதை பார்த்துட்டு ரெட்டை வேஷமான்னு கேட்டாரு. ‘இல்ல சார்…’ னு சொன்னேன். ‘ஓ… அப்ப கிராமத்துல இருந்து கிளம்பி வந்து இப்படி ஆகுற’ன்னு படத்தோட ஒட்டுமொத்த கதையையும் சொல்லிட்டாரு. ஆமா சார் நீங்க சொன்னதுதான் கதைனு சொல்லிட்டு வந்தேன்.
எப்போ எங்க என்னைப் பார்த்தாலும் கன்னத்தை வருடி எப்படி இருக்கன்னு கேட்பாரு. அவருக்கு ஹ்யூமர் சென்ஸ் அதிகம். அவர் ‘எந்திரன்’ படம் பார்க்கும் போது அவருக்கு பின்னாடி உட்கார்ந்து படம் பார்க்குற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. அவர் படத்தை ரசிக்கிறதை நான் பார்த்துட்டே இருந்தேன். ‘எந்திரன்’ல கெட்ட குணமுடைய சிட்டி வந்ததும் கை தட்டினார்.
ஒரு சிலரோட மறைவு நமக்கு சின்க் ஆகாது, அது உண்மைன்னு தோணாது. அதே மாதிரிதான் கலைஞர் இறந்துட்டாருன்னு சொன்னதும் என் நினைவுக்கு வருது. இப்பவும் அவர் நம்மகூட இருக்கிற மாதிரியேதான் இருக்கு.
முதல்வர்னாலே வானத்துல எட்ட முடியாத நட்சத்திரமா இருக்கணும்னு இல்லாம ரொம்ப எளிமையா நம்மளோடவே இருக்குற மாதிரி எளிமையான முதல்வரா ஸ்டாலின் இருக்காரு. ‘அசுரன்’ பார்த்துட்டு போன் பண்ணி, ‘தனுஷ் பிரதர்… ஸ்டாலின் பேசுறேன்’னு சொன்னாரு. பிரதர்னு சொல்லிக் கூப்பிட்டதே ஆச்சர்யமா இருந்துச்சு” என்று பேசியுள்ளார்.