டேராடூன்: இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்க விபத்தில் மீட்கப்பட்ட ஒரு தொழிலாளரின் உயிர் தற்போது காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. மருத்துவம் சார்ந்த அந்த ‘திருப்ப’ நிகழ்வின் பின்னணியைப் பார்ப்போம்.
உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கத்தின் கட்டுமானப் பணியின்போது சுரங்கம் இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் சிக்கினர். இதையடுத்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சில்க்யாரா சுரங்கத்தில் சுமார் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். இந்த அபார மீட்புப் பணியின் வெற்றியை நாடே மகிழ்ச்சியுடன் கொண்டாடியது. ‘எலி வளை’ தொழிலாளர்கள், எஸ்கேப் டனல் அமைக்கும் திட்டம், ஆகர் இயந்திரம் மற்றும் சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் உள்ளிட்டோரின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி சாத்தியமானதை மறுக்க முடியாது.
இருப்பினும், தொழிலாளர்கள் காயமின்றி வெளியே வந்தாலும் கூட அவர்களுக்கு மன உளைச்சல், அதிக பதற்றம், தொடர்ச்சியான கவலை, அமைதியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினாலும் கூட தூங்குவதில் சிரமம், இரவில் அடிக்கடி எழுந்திருத்தல், பயங்கர கனவுகள் போன்ற சிக்கல்களும் உருவாகலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர். இதையடுத்து அவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில் ஓர் அதிசய நிகழ்வும் நடந்திருக்கிறது.
சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களில் ஒருவர்தான் சம்பாவத் பகுதியைச் சேர்ந்த புஷ்கர் சிங் . இவருக்கு முன்பாகவே அதாவது பிறவியிலேயே இதயத்தில் குறைபாடு Congenital heart defects (CHDs) இருந்திருக்கிறது. ஆனால், இது அவருக்கும், அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியவில்லை. அவர் வேலை தேடிதான் சில்க்யாரா சுரங்கத்தின் கட்டுமானப் பணிக்கு வந்திருக்கிறார். புஷ்கர் சிங் நவம்பர் 29ஆம் தேதி சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போதுதான் இவரது இதயத்தில் பிரச்சினை இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.
புஷ்கரின் இதயத்தில் உள்ள குறைபாடு கண்டறியப்பட்ட பிறகு, எய்ம்ஸ் மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் அறுவைசிகிச்சை நடந்தது. புஷ்கர் தற்போது நல்ல நலமுடன் இருக்கிறார். இது குறித்து மருத்துவர் குமார் கூறும்போது, “புஷ்கர் சிங்கின் தைரியம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் கடின உழைப்பும், இந்த மிகவும் சிக்கலான இதய அறுவை சிகிச்சையின் முழுமையான வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்துள்ளது” என்றார்.
அவர் வேலைக்காக உத்தரகாண்ட் சென்றிருந்தாலும், ஒரு சுரங்கப்பாதை விபத்தில் சிக்கி, அதன்பின்னர் மீட்கப்பட்டு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த எதிர்பாராத நிகழ்வு அவரது உயிரைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், அவரது உடல்நலப் பிரச்சினையையும் இப்போது தீர்த்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.