சென்னையின் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ்த் திரையுலகம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டைக் கொண்டாடும் விழா நடந்து வருகிறது. ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் என எக்கச்சக்க நட்சத்திரங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கின்றனர். இதில் நடிகர் கமல்ஹாசன் கலைஞரைப் பற்றி பேசியவை இங்கே.
கறுப்பு வேட்டி சட்டையோடு மேடை ஏறிய கமல்ஹாசன் 10 நிமிடங்களுக்கு உரையாற்றியிருந்தார். அவர் பேசியவை, “எனது நண்பர் விஜயகாந்த் அவர்களின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த அரசியல் பண்பிற்கு முதல்வருக்கு நன்றி.
சினிமாவில் இருக்கும்போதே அரசியலையும் அரசியலில் இருக்கும்போது சினிமாவையும் கலைஞர் தூக்கிப் பிடித்ததை என்றென்றும் மறவோம். கலைஞர் தன்னையும் வளர்த்தார். தமிழையும் வளர்த்தார். தமிழ்நாட்டையும் வளர்த்தார். பாடல்களில் சிக்கிக்கொண்டிருந்த சினிமாவை கனல் தெறிக்கும் வசனங்களின் மையமாக மாற்றினார் கலைஞர். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்களைத் தனது எழுத்து வன்மையால் உச்சநட்சத்திரமாக மாற்றினார் கலைஞர். அமெரிக்க இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கனுக்கு பிடித்த வசனகர்த்தா கலைஞர்தான். கலைஞர்தான் நவீன சினிமாவின் வசன சிற்பி என்றால் மிகை ஆகாது. ‘நேருவின் மகளே வருக… நிலையான ஆட்சி தருக!’ எனச் சொல்லக்கூடிய துணிச்சல் அவருக்குதான் இருந்தது.
சிறுவயதில் என்னுடைய அக்காக்கள் எனக்கு தலை சீவி விடும்போது கலைஞர் மாதிரி நடு வகுடு எடுத்து சீவி விடுங்கள் என்பேன்.
ரஜினி கலைஞரை நெருப்பு என ஒரு விழாவில் கூறினார். அந்த விழாவில் கலைஞர், ‘நான் செருப்பு என்னை அணிந்துக் கொள்ளுங்கள்’ என்றார். அவர் எனக்கு சூட்டிய கலைஞானி என்கிற பட்டம்தான் என்னை இன்னும் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பராசக்தியில் ‘கல் பேசாது’ என ஒரு வசனம் உண்டு. சென்சாரில் அதைத் தூக்கிவிட்டார்கள். படத்தில் சிவாஜி அந்த வசனம் பேசும் இடத்தில் உதட்டு அசைவு மட்டுமே இருக்கும். ஆனால், படம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் ‘கல் பேசாது’ என ஆராவாரமாக வசனம் பேசுவார்கள். அவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்களைத்தான் இன்றைக்கு பிக் பாஸ் வரைக்கும் நான் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்” என பேச்சை முடித்தார் கமல்ஹாசன்.