மதுரை: “ஒரு காலத்தில், காட்டெருமையை வேட்டையாடிய வழக்கில், விவசாயிகள் இருவரும் குற்றவாளிகளாக இருந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் அமலாக்கத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். அமலாக்கத் துறைக்கு வனத்துறை தொடர்பான குற்றங்களை எடுத்து விசாரிப்பதற்கான அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில், சேலத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி விசாரித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அமலாக்கத் துறையின் பணிகள் குறித்து தெரியாமல் யாராவது பேசினால், அதற்கு என்ன பதில் கூறுவது?
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவர், பாஜக அங்கு 3 மாவட்டங்களாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 12 செயலாளர்கள் வீதம் சேலத்தில் மட்டும் 36 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் 750 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். அதில் ஒரு மாவட்டச் செயலாளர் என்னை வந்து பார்த்தார். அவர் படித்தது வெறும் 10-ம் வகுப்பு மட்டுமே. தனக்கு அமலாக்கத் துறைக்கு ஸ்பெல்லிங்கூட தெரியாது என்று என்னிடம் கூறினார். அவர் எப்படி அமலாக்கத் துறையை அழைத்து சோதனை நடத்தச் செல்லியிருப்பார்?
சேலம் விவசாயிகளுக்கு வனத் துறை சட்டத்தின் கீழ் சம்மன் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில், காட்டெருமையை வேட்டையாடிய வழக்கில், விவசாயிகள் இருவரும் குற்றவாளிகளாக இருந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அமலாக்கத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். அமலாக்கத் துறைக்கு வனத்துறை தொடர்பான குற்றங்களை எடுத்து விசாரிப்பதற்கான அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில், அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில் சாதி பெயர் இடம்பெற்றிருப்பதை பாஜகவும் ஏற்கவில்லை. எனவே, அந்த நோட்டீஸ் அனுப்பிய முறையை விமர்சிக்கலாம். ஆனால், அமலாக்கத் துறைக்கு கொடுக்கப்பட்டுள்ள ஃஎப்ஐஆரில் சாதி பெயர் உள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம் என்று நான் ஊகிக்கிறேன். எனவே, இந்தச் சம்பவத்தில் பாஜகவுக்கு தொடர்பு இல்லை. இந்தக் கேள்வியை வனத்துறை அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும்.
தாங்கள் அமலாக்கத் துறைக்கு கடிதமே எழுதவில்லை என்று மாநில அரசு அல்லது வனத்துறை கூறட்டும். அமலாக்கத் துறை நோட்டீஸில் என்ன கேட்கப்பட்டிருக்கிறது? விவசாயிகளின் வங்கிக் கணக்கு எண் மற்றும் ஆதார் எண். இதில் என்ன தவறு இருக்கிறது?” என்று அண்ணாமலை கூறினார்.