புதுடெல்லி: வளர்ந்த இந்தியாவுக்கான சபத யாத்திரையில் 50 நாட்களில் 10 கோடி பேர் பங்கேற்று உள்ளனர்.
சுதந்திர போராட்ட தலைவரும் பழங்குடியின தலைவருமான பிர்ஸா முண்டாவின் பிறந்த தினம் கடந்த நவம்பர் 15-ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ஜார்க்கண்டின் குந்தி நகரில் நடைபெற்ற முண்டாவின் பிறந்த நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது வளர்ந்த இந்தியாவுக்கான சபத யாத்திரையை அவர் தொடங்கிவைத்தார்.
இதன்படி நாடு முழுவதும் எல்இடி திரைகளுடன் கூடிய சிறப்பு வாகனங்கள் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு நகரங்கள், கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்கள் வாயிலாக மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்களை பெற மக்களுக்கு வழிகாட்டப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய தகவல், செய்தி ஒலிபரப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வளர்ந்த இந்தியாவுக்கான சபத யாத்திரையில் 50 நாட்களில் 10 கோடி பேர் பங்கேற்று உள்ளனர். இந்த யாத்திரையின் மூலம் வளர்ந்த இந்தியாவை உருவாக்க 7.5 கோடி பேர் சபதமேற்று உள்ளனர்.
நாடு முழுவதும் நடைபெற்ற யாத்திரையின்போது இதுவரை 1.7 கோடி பேருக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. சுமார் 2.2 கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
பிஎம் கிசான் நிதியுதவி திட்டத்தில் இணைய 33 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். வேளாண் சாகுபடியில் ட்ரோன்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த இலக்கை எட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.