சென்னை: தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்களின் பணியை நிரந்தர செவிலியர்களின் பணியுடன் ஒப்பிட்டு அறிக்கை தர ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த 2015-ம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படையில் 10 ஆயிரம் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு, 8 ஆண்டுகளாகியும் 4 ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே பணிநிரந்தரம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து ஒப்பந்த செவிலியர்கள்தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தொகுப்பூதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணி செய்தால் அவர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர் தலைமையில் குழு அமைத்து நிரந்தர செவிலியர்களின் பணியுடன், தொகுப்பூதிய செவிலியர்களின் பணியையும் ஒப்பிட்டு 6 மாதத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும், என கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அரசு நிறைவேற்றாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் நிரந்தர செவிலியர்களின் பணித்திறனை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் வி.பார்த்திபன், வி.பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளனர். இந்தக்குழு தனது பணிகளை முடித்து மார்ச் 8-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.