American Councilor Vijayapura person | அமெரிக்க கவுன்சிலரான விஜயபுரா நபர்

உலக அளவில் இந்தியர்கள் கோலோச்சி வருகின்றனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமராகவும், கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகவும் உள்ளார். மேலும் பலர் பல நாடுகளில் அமைச்சர்கள், உயர் பதவிகளை அலங்கரித்து உள்ளனர். இந்த பட்டியலில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரும் தற்போது இணைந்து உள்ளார்.

விஜயபுராவை சேர்ந்தவர் நவீன் ஹவண்ணவர். கடந்த 14 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கிறார். அங்கு உள்ள பன்னாட்டு நிறுவனத்தில், சாப்ட்வேர் மேலாளராக பணியாற்றுவதுடன், மனைவி கேத்ரின் என்கிற நிவேதிதா, மகன் நீல், மகள் நீலாவுடன் ரோசெஸ்டர் மாவட்டத்தில் உள்ள, பிட்ஸ்போர்ட் பகுதியில் வசித்து வருகிறார்.

அமெரிக்காவில் சமூக சேவை செய்யும் நவீன், ஜனநாயக கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், பிட்ஸ்போர்ட் வார்டில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட நவீன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட, குடியரசு கட்சி வேட்பாளர் போஹ்னேயே 33 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, கவுன்சிலர் ஆகி உள்ளார்.

நவீன் 4,266 ஓட்டுகளும், குடியரசு கட்சி வேட்பாளர் 4,233 ஓட்டுகளும் பெற்றனர். நவீனின் தந்தை பரப்பா ஹவண்ணவர். இந்தியன் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் ரேணுகா. அமெரிக்காவில் மகன் கவுன்சிலராகி இருப்பதால், விஜயபுராவில் உள்ள பெற்றோர், உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிப்பு வழங்கிக் கொண்டாடுகின்றனர்.

ஆரம்ப கல்வி முதல் பி.யு.சி., வரை விஜயபுராவிலும், பி.எஸ்.சி., படிப்பை கலபுரகி ஷரன் பசவேஸ்வரா கல்லுாரியிலும், எம்.பி.ஏ., படிப்பை பெங்களூரு ராமய்யா கல்லுாரியிலும், நவீன் படித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் படித்த கல்லுாரி மாணவ, மாணவியரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

– நமது நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.