பெங்களூரு : ”பெங்களூரு மத்திய பிரிவின் மூன்று போலீஸ் நிலையங்களில் உள்ள அருங்காட்சியகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன,” என, பெங்களூரு மத்திய பிரிவு டி.சி.பி., சேகர் தெரிவித்தார்.
பெங்களூரு கப்பன் பூங்கா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கஸ்துாரிபா சாலையில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகம்; விதான் சவுதா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ராஜ்பவன் சாலையில் ஜவஹர்லால் நேரு கோளரங்கம்; ஹைகிரவுண்ட்ஸ் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வசந்த் நகரில் உள்ள நவீன கலைக்கான தேசிய காட்சியகம் ஆகியவற்றின் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மின்னஞ்சல் வந்தது. அதில், ‘வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. காலையில் வெடிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
உடனடியாக போலீசாருக்கும், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு பரிசோதனை செய்ததில், இது புரளி என்பதை உறுதி செய்தனர்.
இது தொடர்பாக, பெங்களூரு மத்திய பிரிவு டி.சி.பி., சேகர் கூறியதாவது:
கப்பன் பூங்கா, விதான் சவுதா, ஹை கிரவுண்ட்ஸ் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட அருங்காட்சியகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது தொடர்பாக, மூன்று தனித்தனி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மின்னஞ்சல் வந்தது தொடர்பாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் தகவல் அளிக்க கோரப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement