கியான்வாபி மசூதியின் கள ஆய்வறிக்கையை நிராகரித்த முஸ்லிம் தனிச்சட்ட வாரியம்

புதுடெல்லி: வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில், கோயிலை இடித்துக் கட்டியதற்கான ஆதாரம் இருப்பதாக இந்திய தொல்லியல் ஆய்வகம் (ஏஎஸ்ஐ) அறிக்கை அளித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையை முக்கிய எதிர்மனுதாரரான அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) நிராகரித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த கோயில் இந்துக்களின் முக்கியமான புனிதத் தலமாக உள்ளது. இக்கோயிலின் அருகே முஸ்லிம்களின் கியான்வாபி மசூதியும் அமைந்துள்ளது. இது, முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த மசூதி, காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்துக் கட்டியதாகப் புகார்களும் உள்ளன. இதன் மீதான வழக்கு பல ஆண்டுகளாக வாரணாசி நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

இத்துடன், புதிதாக சிங்கார கவுரி அம்மன் தரிசன வழக்கும் தொடுக்கப்பட்டு வாரணாசி நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. கோயிலுக்கும் மசூதிக்கும் இடையிலுள்ள வளாகச் சுவற்றில் சிங்காரக் கவுரி அம்மன் சிலை பதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனுமதிக்கப்படாத இங்கு அம்மனை தரிசிக்கும் வழக்கின் விசாரணையின்போது மசூதியினுள் அறிவியல் ரீதியானக் களஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. இதை நடத்திய இந்திய தொல்லியல் ஆய்வகம் தனது 839 பக்க அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.

இந்த அறிக்கையை, வழக்கின் இருதரப்பு வாதிகளுக்கும் ஜனவரி 25-ல் ஒப்படைக்கப்பட்டது. இதில் கோயிலை இடித்து மசூதி கட்டியுள்ளதாக ஏஎஸ்ஐ குறிப்பிட்டுள்ளது. இதை ஏற்று ஒரு தரப்பினர், மகிழ்ந்து கொண்டாடி வரவேற்றுள்ளனர். ஆனால், கியான்வாபி வழக்கில் எதிர்வாதிகளில் ஒருவரான ஏஐஎம்பிஎல்பி, இந்திய தொல்லியல் ஆய்வக அறிக்கையை நிராகரித்துள்ளது.

இது குறித்து இந்திய முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஏஐஎம்பிஎல்பி-யின் மூத்த நிர்வாக உறுப்பினரான காசீம் ரசூல் இலியாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்து தரப்பினர் இந்த வழக்கை தொடுத்ததன் மூலம் அராஜகத்தை உருவாக்கி சமூகத்தில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கின் வாதிகளுக்கு மட்டும் அளிக்கப்பட்ட களஆய்வு அறிக்கையை வெளியில் கசிய விடப்பட்டுள்ளது. இது, நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். இதில் தெளிவான ஆதாரமும் இல்லாமையால் அந்த அறிக்கையை நாம் ஏற்க மாட்டோம்.’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மற்றொரு எதிர்மனுதாரரும் கியான்வாபி மசூதியை நிர்வாகிக்கும் அஞ்சுமன் இன்தசாமியா மசூதி அறக்கட்டளையின் இணைச்செயலாளர் எஸ்.எம்.யாசீன் கூறுகையில், ‘‘ஏஎஸ்ஐ அறிக்கையை எங்கள் வழக்கறிஞர்கள் குழு இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை. இந்த அறிக்கை மீது கருத்து கேட்டு இரண்டு வரலாற்றாளர்களுக்கு அனுப்பியுள்ளோம். அனைத்து ஆலோசனையின் முடிவுகள் வரும் வரை, அதன் மீது நாம் கருத்து கூற முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கியான்வாபியை போல், உத்தரபிரதேசத்தின் மதுராவிலுள்ள கிருஷ்ண ஜென்மபூமி கோயிலுக்கு அருகிலுள்ள ஷாயி ஈத்கா மசூதி மீதும் சிக்கல்கள் கிளம்பியுள்ளன. அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட இந்த மசூதியும் கோயிலை இடித்து கட்டியதாகவும், அங்கும் ஏஎஸ்ஐ-யினரால் கள ஆய்வு நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் மீது நவம்பர் 19, 2019ல் வெளியான தீர்ப்பின் வழக்கிலும் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எதிர்மனுதாரராக இருந்தது. இந்த அமைப்பானது பாபர் மசூதிக்காக இந்திய முஸ்லிம்கள் சார்பில் வாதாடியது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.