சென்னை தி.நகர் தண்டபாணி தெருவில் வசித்து வருபவர் ராகேஷ். இவர் தனது வீட்டின் அருகே மொத்த ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 24.1.2024-ம் தேதி இரவு, புடவைகள் கொண்ட இரண்டு பண்டல்களை கடைக்கு பைக்கில் எடுத்து வந்தார். அதில் ஒரு பண்டலை கடைக்குள் கொண்டு சென்றார் ராகேஷ். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கையும் அதிலிருந்த ஒரு பண்டல் புடவைகளும் மாயமாகியிருந்தன. இது குறித்து ராகேஷ், மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், `நான் கடந்த 13 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். ஆர்டரின் பேரில் கடைகளுக்குத் துணிகளை அனுப்புவதோடு, விற்பனை செய்யப்படாத துணிகளை திரும்பக் கடைகளுக்கு பைக்கில் எடுத்துவருவது வழக்கம்.

கடந்த 24-ம் தேதி விற்பனை செய்யப்படாத துணிகளை எடுத்துக் கொண்டு பைக்கில் கடைக்கு வந்தேன். ஒரு பண்டலை கடைக்குள் எடுத்துச் சென்றதால், பைக்கிலேயே சாவியை வைத்திருந்தேன். அதன் பிறகு திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கோடு சேர்த்து துணி பண்டலையும் யாரோ ஒருவர் திருடிச் சென்றுவிட்டார். அதனால் அவரைக் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தினார்.
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது புடவைகளையும் பைக்கையும் திருடியது, சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த லோகேஷ் (23) எனத் தெரியவந்தது. அவரிடமிருந்து 40 புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு 20 ஆயிரம் ரூபாயாகும். விசாரணைக்குப் பிறகு லோகேஷை போலீஸார் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து மாம்பலம் போலீஸார் கூறுகையில், “கைதுசெய்யப்பட்ட லோகேஷ், கடைக்காரர் ராகேஷை பின்தொடர்ந்து வந்திருக்கிறார். பின்னர் ராகேஷ், பைக்கில் சாவியை வைத்துவிட்டு செல்வதைக் கவனித்த லோகேஷ், அதை திருடிச் சென்றிருக்கிறார். பைக் சென்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் லோகேஷைக் கைதுசெய்துவிட்டோம். தொடர்ந்து அவரின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY