Invest in Tamil: CM Stalins speech at Investors Conference in Spain | “தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்”: ஸ்பெயினில் முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மேட்ரிக்: ”பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன. தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்” என ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார்.

மேலும் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திடும் விதமாக உங்களுடைய முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு காத்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் 4வது பொருளாதாரமாக ஸ்பெயின் திகழ்வது போல் இந்தியாவின் 2வது பொருளாதாரமாக தமிழகம் விளங்குகிறது.

ஒற்றுமைகள்

தமிழகத்துடன் வணிக உறவுகள் மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளில் 6வது பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது. தமிழகத்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. திருவள்ளுவர் பிறந்த புகழ் பெற்ற தமிழ் மண்ணில் இருந்து வந்திருக்கிறேன். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள மொழி எங்கள் தமிழ் மொழி.

காத்திருக்கும் சலுகைகள்

மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக ஸ்பெயின் விளங்குகிறது. காளை அடக்குதல் விளையாட்டு ஸ்பெயினின் தேசிய விளையாட்டாகவும், பாரம்பரிய விளையாட்டாகவும் விளங்குகிறது. பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனித வளத்தையும் உறுதி செய்வதோடு உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம்.

மருத்துவ சேவைகள்

வாகனங்கள், குறிப்பாக மின்வாகனங்கள், மின்னணுக் கருவிகள், தோல் பொருள்கள், தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருகின்றது.

பன்மடங்கு

இந்தத் துறைகளிலும், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, உயிர் அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், உப்புநீக்கம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் உங்களின் மேலான முதலீடுகளை மேற்கொள்ளுமாறு, ஸ்பெயின் முதலீட்டாளர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறேன். பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.