தமிழில் கதாநாயகிகளை மையப்படுத்தும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஜோதிகா, இப்போது மலையாளம், இந்தி என மற்ற படவுலகிலும் அசத்திவருகிறார்.
அசத்தலான அவரது பட லைன் அப்கள் வியக்க வைக்கின்றன. மலையாளத்தில் ‘காதல் தி கோர்’ படத்தில் நடிப்பில் மம்மூட்டியோடு சமர் செய்திருக்கிறார் ஜோதிகா… ’20 ஆண்டுக்கால வலியாலும், ஏக்கத்தாலும், கோபத்தாலும், காதலாலும் இறுகிப்போன தன் அகத்தை, அதிரடியாகவோ ஆக்ரோஷமாகவோ வெளிக்காட்டாமல், தன் கணவருக்கும் சேர்த்தே போராடும் ஓமனாவாக ஜோதிகா ஸ்கோர் செய்திருக்கிறார்’ எனப் பாராட்டுகளையும் அக்கட தேசத்தில் குவித்துவிட்டார் ஜோ.

இதற்கிடையே பாலிவுட்டிலும் கைவசம் படங்கள் வைத்திருக்கிறார் ஜோதிகா. ‘சைத்தான்’, ‘ஶ்ரீ’ என இரண்டு படங்களில் நடித்துவருகிறார். இதில் ‘சைத்தான்’ படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. சமீபத்தில் அதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் அஜய்தேவ்கன், மாதவன் நடித்திருக்கிறார்கள். இதில் அஜய்தேவ்கனின் மனைவி துர்கா சர்மாவாக நடித்திருக்கிறார் ஜோதிகா. இப்படம், வருகிற மார்ச் 8-ம் தேதி மகளிர் தின ஸ்பெஷலாக வருகிறது.
இதற்கிடையே ராஜ்குமார் ராவ்வின் ‘ஶ்ரீ’ படத்தில் நடித்து வருகிறார். விழித் திறன் சவாலுடையவரும், இளம் தொழிலதிபருமான ஶ்ரீகாந்த் பொல்லாவின் பயோபிக் என்கிறார்கள். இதில் ஶ்ரீகாந்த் பொல்லாவாக ராஜ்குமார் ராவ் நடித்து வருகிறார். இப்படம் கோடையில் வெளியாகும் என்கிறார்கள். இது தவிர, ஓ.டி.டி-க்கான வெப்சீரீஸ் ஒன்றிலும் நடித்துவருகிறார். அதன் படப்பிடிப்பும் மும்பையில் நடந்துவருகிறது.

சூர்யா – ஜோதிகாவின் குழந்தைகள் மும்பையில் படித்து வருவதால், படப்பிடிப்பும் மும்பையிலேயே இருக்கும் என்பதால் இந்திப் படங்களுக்கு ஓகே சொல்லிவிடுகிறார். திருமணத்திற்குப் பிறகு தமிழில் ஜோதிகா நடித்த படங்கள் பெரும்பாலும் ஹீரோயின் சென்ட்ரிக் ஆகும். எனவே, கதாநாயகிக்கான படங்களை கமிட் செய்தால், படப்பிடிப்பிற்காக அவர் சென்னையில் பல மாதங்கள் செலவிட நேரிடும் என்பதால், குழந்தைகளின் படிப்பைக் கருத்தில் கொண்டு அதிக நாள்கள் கால்ஷீட் ஆகும் படங்களைத் தற்போது தவிர்த்துவருகிறார். அதனால்தான் தமிழில் இன்னமும் படங்கள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார் என்கிறார்கள். இதற்கிடையே மலையாளத்தில் ‘காதல் தி கோர்’ படத்திற்குப் பின், அங்கிருந்தும் நடிக்கக் கேட்டு ஏராளமான வாய்ப்புகள் வருகின்றனவாம்.