கோலார் : கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்காத காங்கிரஸ் அரசை கண்டித்து, நேற்று கோலாரில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
சட்டசபை எதிர்க் கட்சித் தலைவர் அசோக் பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பாதித்துள்ளனர். நிவாரண நிதி தலா 2,000 ரூபாய் வழங்குவதாக பெலகாவி கூட்டத் தொடரின்போது தெரிவித்தனர். ஆனால் மாதங்கள் பல கடந்தும் இன்னும் வழங்கவில்லை. இந்த அரசு விவசாயிகளை ஏமாற்றுகிறது.
ஆனால், சிறுபான்மைத் துறையினருக்கு நிதி வழங்க வேண்டும் என்று மனு அளித்ததும் மூன்றே நாளில் 1,000 கோடி ரூபாயை வழங்கினர். லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு ஓட்டுக்காக செய்துள்ளனர்.கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ. ஆட்சி நடந்த போதும் வறட்சி ஏற்பட்டது. அப்போது அக்டோபரில் அறிவித்து, டிசம்பரில் 3,000 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. விவசாயிகள் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டது.
விவசாயத்துக்கு மட்டுமின்றி தோட்டக் கலைத்துறை உற்பத்திக்கும் நிவாரணம் வழங்கப் பட்டது. மாநில அரசின் நிதியில் இருந்தே வழங்கினோம். ஆனால், விவசாயிகள் நலனில் அக்கறை காட்டாத அரசாக, காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூடாரம் காலியாக போகிறது என்பதால், அவர்களை சரி கட்ட, அவர்களின் தொகுதிகளுக்கு நிதியை வழங்குகின்றனர்.
விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும். இல்லையேல், ஆட்சி அதிகாரத்தை விட்டு விலக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட பா.ஜ., தலைவர் வேணு கோபால் தலைமையில் நடந்த, போராட்டத்தில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, கோலார் தொகுதி பா.ஜ., — எம்.பி., முனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement