ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது மனைவி கல்பனாவை முதல்வராக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
நிலமோசடி தொடர்பான பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவாகியிருப்பதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியது. போஸ்டர் வரை ஒட்டியது. இதன்பிறகான சிலமணி நேரங்களில் ராஞ்சியில் நடந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார் ஹேமந்த் சோரன். மாநிலத்தின் அரசியல் சூழல் குறித்து விவாதிப்பதற்காக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றதாக சொல்லப்பட்டது. ஆனால், இந்தக் கூட்டம் நடக்கும் முன்பாகவே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலத் தலைநகரை விட்டு வெளியேற வேண்டாம் அக்கட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த இரு நாட்களாகவே ஜார்கண்ட் மாநில அரசியல் சூழல் பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது. நிலமோசடி தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, டெல்லி சென்றிருந்த ஹேமந்த் சோரனிடம் டெல்லி வீட்டில் வைத்தே அமலாக்கத் துறை விசாரணை செய்தது. திங்கள்கிழமை தொடங்கிய இந்த விசாரணை 13 மணி நேரம் நீடித்தது. அதேபோல் ஹேமந்த் சோரனின் டெல்லி வீட்டில் அமலாக்கத் துறை மேற்கொண்ட சோதனையில் ரூ.36 லட்சம் பணம், பிஎம்டபிள்யூ சொகுசு கார் மற்றும் பல ஆவணங்கள் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த காட்சிகளுக்கு மத்தியில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசுத் தொகை தரப்படும் எனவும் அம்மாநில பாஜக தலைமை மாநிலம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவின் குற்றச்சாட்டுக்கு ஏற்றாற்போல், ஹேமந்த் சோரன் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. போதாக்குறைக்கு தலைநகர் ராஞ்சியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் வைத்து ஹேமந்த் சோரன் பதவி விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக எம்.பி.யும், ஜார்கண்ட் தலைவருமான நிஷிகாந்த் துபே, “ஹேமந்த் சோரன் விசாரணை அமைப்புகளை எதிர்கொள்ளாமல் தப்பியோடுகிறார். அவரால் எப்படி அதிகாரிகளையோ அல்லது மாநில மக்களையோ பாதுகாக்க முடியும். தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை ராஞ்சிக்கு வருமாறு அழைத்துள்ளார். சில தகவளின்படி, மனைவி கல்பனாவை முதல்வராக்க ஹேமந்த் சோரன் திட்டமிட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
நிஷிகாந்த் துபேவின் சந்தேகங்களுக்கு ஏற்றார்போல், ராஞ்சியில் இன்று நடந்த கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தனித்து தெரிந்தது ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன். அந்தக் கூட்டத்தில் ஹேமந்த் சோரன் உடன் அவரது மனைவி கல்பனா சோரனும் கலந்துகொண்டார். கூட்டத்தில் நெருக்கடியை சமாளிக்க கல்பனா சோரனை முதல்வராக நியமிக்க எம்எல்ஏக்களின் ஆதரவை கோரியதாக சொல்லப்படுகிறது. எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஹேமந்த் சோரன் உடன் அவரது மனைவி கல்பனா சோரன் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவை, 26 ஆண்டுகளுக்கு முன்பு பிஹாரில் லாலு பிரசாத் யாதவ்வுக்கு நடந்ததை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளதாக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.
1997ல் அப்போது பிஹார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் கால்நடைத் தீவன ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. பதவி விலகிய லாலு தனது மனைவி ராப்ரி தேவியை முதலமைச்சராக்கினார். லாலு ராஜினாமா செய்து முதல்வராக ராப்ரி தேவி பதவியேற்றாலும் அரசாங்கம் அனைத்தும் லாலுவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அப்போது நடந்த ஒரே மாற்றம் அரசாங்க ஆவணங்களில் ராப்ரி தேவி கையெழுத்து போடுவது மட்டுமே. இதே பாணியில் ஹேமந்த் சோரனும் தனது மனைவி கல்பனாவை முதல்வராக்க முயற்சித்து வருகிறார் என்பதே ஜார்கண்டின் தற்போதைய ஹாட் டாப்பிக். அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே தலைநகர் ராஞ்சியில் 144 தடை, கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம் என்று காட்சிகள் நகர்கிறது.
அமலாக்கத் துறை எப்படியும் தன்னை கைது செய்யக்கூடும் என்று ஹேமந்த் சோரன் அஞ்சுவதால், கைதுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தை தனது குடும்ப வசமே வைத்திருக்கும் வகையில் மனைவியை முதல்வராக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜார்கண்ட் மாநில செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான நடவடிக்கையை இப்போது இல்லை, இம்மாத தொடக்கத்திலேயே ஆரம்பித்துவிட்டார் ஹேமந்த். இம்மாத தொடக்கத்தில் சர்பராஸ் அகமது எனும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமா மூலம் காண்டே தொகுதி புதிய இடைத்தேர்தலை எதிர்நோக்க இருக்கிறது. ராஜினாமா குறித்து பேட்டியளித்த சர்பராஸ் அகமது, ’கசப்பினால் ராஜினாமா செய்யவில்லை, கட்சிக்காகவும் தலைவர் ஹேமந்த் சோரனுக்காகவும் ராஜினாமா செய்கிறேன்’ என்று பேட்டியளித்தார். காண்டே தொகுதியில் கல்பனா சோரன் போட்டியிடும் வகையில் சர்பராஸ் ராஜினாமா செய்ததாக சொல்லப்படுகிறது.
இவ்வாறாக எழுந்துள்ள ஊகங்கள், அடுத்தடுத்து நடக்கும் காட்சிகள் ஜார்கண்ட் அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கல்பனா முதல்வராக பதவியேற்க மாட்டார் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்களான அம்பா பிரசாத் மற்றும் தீபிகா பாண்டே சிங் ஆகியோர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்த பேசிய இவர்கள் இருவரும் அப்படி ஒரு திட்டம் இல்லை என்று உறுதிபட தெரிவித்தனர். அதேநேரம், கூட்டம் முடிந்த பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஹேமந்த் சோரன், “எல்லாவற்றையும் விரைவில் கூறுவேன்” என்றார். ஆனால், ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் இதுதொடர்பாக பேசுகையில், “மாநிலத்தில் நடந்துவரும் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார். இப்படியாக ஜார்கண்ட் அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
சில தினங்கள் முன்பு தான் பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜகவுடன் மீண்டும் இணைந்து முதல்வராக பதவியேற்றார். இந்த விவகாரம் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது ஜார்கண்ட் விவகாரம் புதிய பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.