இனிமேல் ஆட்டோக்களை ஆப்பில் புக் செய்வதென்றால், கவலையே இல்லை. ஓலா, உபர், ரேபிடோ தாண்டி பல ஆப்கள் வந்து கொண்டே இருக்கின்றன. லேட்டஸ்ட்டாகத்தான் TamilNadu Metre Auto என்றொரு ஆட்டோக்களுக்கான புக்கிங் ஆப் வெளியானது. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்களாலேயே உருவாக்கப்பட்டது என்பது ஸ்பெஷல்.
அடுத்த ஆப் களமிறங்கி விட்டது. ஆனால், இது புது ஆப் இல்லை. ஏற்கெனவே பெங்களூருவில் வெற்றிகரமாக ஹிட் அடித்து ஓடிக் கொண்டிருக்கும் ஆப்தான். ‘நம்ம யாத்ரி’ (Namma Yatri) என்ற அந்த ஆப், இப்போது சென்னைக்கும் வந்துவிட்டது. நேற்று இதை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், பல ஆட்டோ டிரைவர்கள் முன்னிலையில் லாஞ்ச் செய்தார்கள். இந்த ஆப்பை தமிழ்நாடு போக்குவரத்து கமிஷனர் சண்முக சுந்தரம் ஃப்ளாக் ஆஃப் செய்து தொடங்கி வைத்தார்.

இதிலும் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது; என்னவென்றால், இது ஒரு ஜீரோ கமிஷன் ஆப் என்பதுதான் டாக் ஆஃப் தி ஆட்டோ டிரைவர்களாக இருக்கிறது. ஆம்! வழக்கமாக ஓலா, உபர், ரேபிடோ போன்ற நிறுவனங்கள் என்ன செய்வார்கள். 100 ரூபாய்க்கு ரைடு அடிக்கிறார்கள் என்றால், அதில் சில பெர்சன்டேஜ் தொகையை கமிஷனாக டிரைவர்கள், அந்த நிறுவனத்துக்குக் கட்ட வேண்டும்தானே! ஆனால், இதில் கம்பெனிக்கு எந்த கமிஷனும் இல்லை என்பதுதான் இதன் ஸ்பெஷலே!
மத்திய அரசாங்கத்தின் ஒத்திசைவுடன் இயங்கும் ONDC (Open Network for Digital Commerce) என்கிற ஆர்கனைசேஷனுடன் இணைந்து இயங்கும் இந்த நம்ம யாத்ரியின் தலைவர் விமல், சண்முகவேல் (இவர்தான் JusPay என்றொரு ஆப்பின் Chief Growth Officer). விமல், அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது ஸ்பெஷல்.
‘‘நானும் மகிழனும் சேர்ந்துதான் நம்ம யாத்ரி ஆப்பை லீட் செய்யப் போகிறோம். 2020–ல் ‘யாத்ரி’ என்று வெறும் பெயருடன் கொச்சியில்தான் இதை முதன் முதலில் லாஞ்ச் செய்தோம். இதுவும் ஒரு ஓப்பன் டேட்டா டைப்பில், டைரக்ட் டு டிரைவர்ஸ் பேமென்ட் மோடில் இதை லாஞ்ச் செய்தோம். அப்புறம் இது பெங்களூருவில் சில ஆட்டோ டிரைவர்கள் எங்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இதை அஃபிஷியலாகப் போன ஆண்டு ஜனவரி 2023–ல்தான் லாஞ்ச் செய்தோம்!’’ என்றார் சண்முகவேல்.
இந்த ஆப்பை டவுன்லோடு செய்து கொண்டு வழக்கம்போல் ஆட்டோக்களை புக் செய்து கொள்ளலாம். அதேபோல், ஆட்டோ டிரைவர்கள் யார் வேண்டுமானாலும், இந்த நம்ம யாத்ரியில் டிரைவராக ஆட்டோ ஓட்டிக் கொள்ளலாம். இதற்குத் தேவை – சொந்தமாக ஒரு ஆட்டோ, அதன் ஆர்சி புக், டிரைவிங் லைசென்ஸ், இன்ஷூரன்ஸ் போன்ற சில சமாச்சாரங்கள் இருந்தாலே போதும். இடைத்தரகர்கள் இதில் இல்லாததால், வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பேமென்ட் தொகை, நேரடியாக டிரைவருக்கே போகும் என்பதால், இதுவரை சென்னை முழுக்க அதற்குள் சுமார் 13,000 டிரைவர்கள் புக் செய்திருக்கிறார்கள். இதில் 8,000 பேர் கிட்டத்தட்ட ஆக்டிவ் ஆகி ஆட்டோ ரைடு போக ஆரம்பித்து விட்டார்கள்.

டிரைவர்களுக்கு இதில் செமத்தியான லாபம் இருக்கிறது. அதாவது, முதல் 3 மாதங்களுக்கு டிரைவர்கள் எந்த சார்ஜும் கட்டத் தேவையில்லை. அதன் பிறகு ஒரு நாளைக்கு 25 ரூபாய் கட்ட வேண்டும். அதை வைத்துத்தான் இந்த ஆப்பை ரன் செய்யப் போகிறார்களாம்.
இதில் 2 ப்ளான்கள் இருக்கின்றன. தினசரி தொகையாக 25 ரூபாய் கட்டுவது; அல்லது ஒரு ரைடுக்கு 3.5 ரூபாய் வரை கட்டினால் போதும். அதுவும் 10 ரைடுகள் வரைதான். அதற்கு மேலே அன்லிமிட்டெடட் ரைடுகளை எடுத்துக் கொள்ளலாம்.
இதனால், ஏகப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் இந்த ஆப் லாஞ்ச்சுக்கு வந்து, தங்கள் சந்தேகங்களையும் கேட்டார்கள். அதிலும் பெண் டிரைவர்கள் எக்கச்சக்கமாக வந்திருந்தார்கள். மோகனா என்கிற பெண் ஆட்டோ டிரைவர், ‘‘சார், முதல்ல எல்லா ஆப் கம்பெனியும் இப்படித்தான் ஆஃபர் தருவாங்க! அப்புறம் போகப் போக எங்ககிட்ட பணம் வாங்கி அந்த கமிஷன் தொகையைப் பிடிக்க ஆரம்பிச்சுடுவாங்க! அப்படி எதுவும் பண்ணுவீங்களா! அப்புறம் பெண் டிரைவர்களுக்குப் பாதுகாப்பு உண்டா!’’ என்றெல்லாம் கேட்டார்.

‘‘அப்படியெல்லாம் நாங்கள் செய்வதற்கில்லை. இது டிரைவர்களுக்கு மரியாதையை உண்டு பண்ணும் ஆப். நிச்சயம் பெண் டிரைவர்களுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் உண்டு!’’ என்றார் விமல்.
பெங்களூரு, கொச்சியில் இது ஹிட் அடித்த ஒரு ஆப் என்கிறார்கள். சென்னையிலும் இது ஹிட் அடிக்கிறதா பார்க்கலாம்!