கட்டுப்பாட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருங்கற்களை ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு..
நாட்டில் தற்போது கட்டுமான அபிவிருத்திகளுக்குத் தேவையான கருங்கல் தேவை ஒப்பீட்டு ரீதியில் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால் கருங்கல் அகழ்வு தொழிற்துறையில் ஈடுபடுகின்ற அகழ்வோர் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூகத்தவர்களின் வாழ்வாதார வழிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட நிலைமையின் கீழ் கருங்கல் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டுகின்ற வேலைத்திட்டமொன்றை குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தல் பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகக் கட்டுமானத்தின் போது அகற்றப்பட்டுள்ள கருங்கல் தொகையை தற்போது துறைமுக நகரத்தில் நிர்வாகக் கட்டிடத்திற்கு அருகிலும், ஹம்பாந்தோட்டை புதிய மருத்துவமனை வளாகத்திலும் குவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கருங்கல் குவியல்கள் துரிதமாக அகற்றப்பட வேண்டியுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் கண்காணிப்பின் கீழ் குறித்த கருங்கல் தொகையை துரிதமாக ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதற்கும், ஒரு மில்லியன் மெட்ரிக்தொன் கருங்கல் தொகையை ஏற்றுமதி செய்வதற்கான இயலுமை மற்றும் பொருத்தப்பாடு தொடர்பான விடயங்களை ஆராய்ந்து விதந்துரையுடன் கூடிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.