இஸ்லாமாபாத், அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாக்., பிரதமராக, 2018 – 22 வரை பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான், 71, பதவி வகித்தார். இவரது ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
குற்றச்சாட்டு
இதைத் தொடர்ந்து, இம்ரான் மீது ஊழல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் கடந்த மாதம் ஆகஸ்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, தன் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா சதி செய்ததாக இம்ரான் குற்றஞ்சாட்டினார்.
மேலும், அமெரிக்காவின் உதவியுடன் தன்னை கொலை செய்யவும் சிலர் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும் அவர் கூறினார். அப்போது, அவர் அரசு ரகசிய ஆவணங்களை வெளியே கசிய விட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை, ராவல்பிண்டியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
பின்னடைவு
இம்ரான் கான் மற்றும் அவரது பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாகிஸ்தானில், பிப்., 8ல் பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டன.
ஏற்கனவே அவர், ஊழல் வழக்கில் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
பதவியில் இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை கருவூலத்தில் ஒப்படைக்காமல், விதிமுறைகளை மீறி விற்று, சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே உள்ள இந்த நெருக்கடிகளுடன், தற்போது, 10 ஆண்டு சிறைத்தண்டனையும் சேர்ந்துள்ளதால், அவரது அரசியல் வாழ்க்கைக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்