புதுடில்லி :அரபிக்கடலில் பாகிஸ்தானைச் சேர்ந்த, 19 பேர் சென்ற மீன்பிடிக் கப்பலை, சோமாலியா கடற்கொள்ளையர் நேற்று முன்தினம் கடத்தினர். நம் கடற்படை விரைந்து சென்று, கப்பலுடன், 19 பேரையும் பாதுகாப்பாக மீட்டது.
அரபிக்கடலில், அல் நயீமி என்ற மீன்பிடி கப்பல் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பலில், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த 19 பேர் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஆயுதமேந்திய சோமாலிய கொள்ளையர், மீன்பிடி கப்பலை கடத்தியதுடன், அதிலிருந்த 19 பேரையும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.
கப்பலில் இருந்தவர்கள் அவசர உதவி கோரியதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற நம் கடற்படையின், ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல், கடற்கொள்ளையரிடம் இருந்து கப்பலையும், 19 பேரையும் பாதுகாப்பாக காப்பாற்றியது.
இது குறித்து, நம் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் விவேக் மத்வால் கூறியதாவது:
அரபிக்கடலில் சென்ற அல் நயீமி என்ற மீன்பிடி கப்பலையும், அதிலிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த, 19 பேரையும், சோமாலியாவைச் சேர்ந்த, ஆயுதமேந்திய 11 கடற்கொள்ளையர் கடத்தினர்.
கப்பலில் இருந்தவர்கள் அவசர உதவி கோரியதை அடுத்து, நம் கடற்படையின், ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பலில் இருந்த அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து, கடற்கொள்ளையரிடம் பேசி, கப்பலையும், 19 பேரையும் பாதுகாப்பாக காப்பாற்றினர்.
கடலில் உள்ள அனைத்து கப்பல்கள் மற்றும் கடற்படையினரின் பாதுகாப்பை, நம் கடற்படை உறுதி செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில், இரண்டாவது கடற்கொள்ளை முயற்சியை, நம் கடற்படை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
கடந்த 28ம் தேதி இரவு, சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில், ஈரான் கொடியுடன் சென்ற மீன்பிடிக் கப்பலையும், 17 பேரையும், சோமாலியா கொள்ளையர் கடத்தினர். இந்த கடத்தல் முயற்சியையும், ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்