சென்னை: சென்னையைச் சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் பண்டாரி கூறியுள்ளதாவது:
ராம ஜென்ம பூமியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அமாவா ராமர் கோயிலில் நிறுவப்படுவதற்காக தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தை எங்கள் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. ”நானோ டெக் கோல்டன் டெபாசிஷன்” தொழில்நுட்பத்தின் மூலம் இந்த கலசம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பதிமூன்றரை அடி உயரம் கொண்ட முலாம் பூசப்பட்ட இந்த தங்க கலசத்தை 72 வயதான அலாவுதீன் 45 நாட்களில் உருவாக்கியுள்ளார். 400 கிராம் தங்கத்துடன், மொத்தம் 120 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட இந்த தங்க கலசம் தற்போது அமாவா ராமர் கோயிலை அலங்கரித்துள்ளது. 30 ஆண்டு உத்தரவாதத்துடன் இந்த கலசம் உருவாக்கப்பட்டு கோயிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எங்கள் தயாரிப்பில் உருவான 3,000-க்கும் மேற்பட்ட கலசங்கள் இந்தியாவின் பல கோயில்களில் மகுடமாக சூட்டப்பட்டுள்ளது எங்களது முன்னோடி பணிக்கு சான்றாக உள்ளது. இவ்வாறு பங்கஜ் பண்டாரி கூறியுள்ளார்.