அமெரிக்காவில் வானில் பறக்கவிடப்பட்ட 'ஜெய் ஸ்ரீராம்' பேனர்

வாஷிங்டன்,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா கடந்த 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாடும் விதமாக அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நேற்று விமானம் மூலம் ‘பிரபஞ்சம் சொல்கிறது ஜெய் ஸ்ரீராம்’ என்ற பேனர் வானில் பறக்கவிடப்பட்டது. இந்த நிகழ்வைக் காண ஏராளமான இந்திய-அமெரிக்கர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து, காவிக் கொடிகளை அசைத்து, “ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷமிட்டனர்.

இந்த வான்வழி நிகழ்ச்சியின் அமைப்பாளரான உமாங் மேத்தா கூறுகையில், “500 ஆண்டுகால தியாகம் மற்றும் உறுதிப்பாட்டின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஸ்ரீராமர் கோவில் திறக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. நமது மகிழ்ச்சியை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். ஸ்ரீராமரைப் போற்றும் வகையில் வான்வழி பேனர் பறக்கவிடப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்” என்று தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.