விமானப் பயணத்தில் திடீர் உடல்நிலை பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மயங்க் அகர்வால்

அகர்தலா,

இந்திய கிரிக்கெட் வீரரான மயங்க் அகர்வால், தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் கர்நாடக அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், திரிபுரா அணிக்கு எதிராக வெற்றிபெற்ற பிறகு, தன் அணியினருடன் அகர்தலாவில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் செல்ல இன்று விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென தொண்டையில் பிரச்னை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் 2 முறை வாந்தியும் எடுத்துள்ளார்.

இதையடுத்து, மயங்க் அகர்வால் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, அவசரமாக, அகர்தலாவில் உள்ள ஐ.எல்.எஸ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருடன் கர்நாடகா மாநில அணியின் மேலாளரும் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு உடனடியாக ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்ட மயங்க் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

அகர்வால் வாந்தி எடுத்ததால் அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவர் தற்போது அபாயகரமான நிலையில் இருந்து மீண்டு விட்டதாகவும், இருப்பினும் அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்கானித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மயங்க் அகர்வால் உடல்நிலை குறித்து கர்நாடகா மாநில அணியின் மேலாளர் ரகுராம் பட் கூறுகையில், ‘ மயங்க் அகர்வாலுக்கு ஆபத்தில்லை. நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவர் மீண்டும் களத்திற்கு திரும்ப முடிவு செய்வதற்கு முன், பெங்களூருவுக்குத் திரும்பிச் சென்று உள்ளூர் மருத்துவர்களை கலந்தாலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் விரைவில் களத்தில் இறங்குவார்’ என கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.