குருகிராம்,
அவர்களை தடுப்பதற்காக பண்ணை இல்ல உரிமையாளர்களில் ஒருவரான பிரவீன் குமார் மற்றும் அவருடைய உதவியாளர்கள் சென்றனர்.
அரியானாவின் குருகிராம் நகரில் பலியாவாஸ் கிராமத்தில் பண்ணை இல்லம் ஒன்றில் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், டெல்லியில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 30 மாணவர்கள் வரை கலந்து கொண்டனர்.
அப்போது, கார்களை நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டு உள்ளது. பண்ணை இல்லத்திற்கு வெளியே குறுகலான பகுதியில், சாலையை மறித்து கார்களை நிறுத்தியதில் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது.
இதனால், அந்த பகுதி மக்கள் ஒன்றாக சேர்ந்து, பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், வேறு சிலரும் இணைந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்ளை தாக்கியுள்ளனர்.
அவர்களை தடுப்பதற்காக பண்ணை இல்ல உரிமையாளர்களில் ஒருவரான பிரவீன் குமார் (வயது 36) மற்றும் அவருடைய உதவியாளர்கள் சென்றனர். தாக்குதலில் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், நேற்று முன்தினம் பிரவீன், தனியார் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார்.
இதேபோன்று, பலத்த காயமடைந்த டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் கஜேந்திரா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று (செவ்வாய் கிழமை) உயிரிழந்து விட்டார்.
இதனை தொடர்ந்து, பண்ணையின் மற்றொரு உரிமையாளரான நரேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில், சச்சின் மற்றும் ஆஷிஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மற்ற குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.