52 நாட்கள் சிறைவாசத்திற்கும், ஜூலை 23 பேரணியில் அனுபவித்த சித்ரவதைகளுக்கும் பின்னர் எஸ்டேட்டுக்கு வெளியே சென்று அவ்வப்போது போராடும் முறை முடிவுக்கு வந்தது.
ஆனால் கம்பெனிக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்கள் முன்பு போல எஸ்டேட்டுக்குள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. காவல்துறை தடியடியில் பலியான 17 பேரில், போராட்டத்தில் முன்னணியில் நின்ற மாஞ்சோலை மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டுகளிலிருந்து எவரும் இல்லை என்பதாலும், அன்று தாமிரபரணி ஆற்றங்கரையில் நடந்த சம்பவத்தின் முழுமையான விவரணை ஊடகங்கள் வாயிலாகவோ, தலைவர்கள் வாயிலாகவோ அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதாலும், அந்த கோர நிகழ்வு எஸ்டேட்டில் ஒன்றும் பெறும் தாக்கத்தினை ஏற்படுத்தி விடவில்லை.
கூலி உயர்வு போராட்டம் துவங்கிய 1998ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி எஸ்டேட்டுகளில், பதிவு செய்து நிரந்தரத் தொழிலாளர்களாக வேலைபார்த்தவர்களின் எண்ணிக்கை 2196. அதற்குச் சமமான எண்ணிக்கையில் தற்காலிகத் தொழிலாளர்களும் அங்கு இருந்தனர். இதற்கிடையில் 1999 அக்டோபரில் 70/- ரூபாயாகவும், 01.04.2000 அன்று 75/-ரூபாயாகவும் தினக்கூலி உயர்ந்தது. அதன் பலனை மாஞ்சோலை பகுதி எஸ்டேட் தொழிலாளர்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டத்தில் இருக்கும் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களும் அனுபவித்தனர்.
எஸ்டேட் தொடங்கி 70 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக சிங்கம்பட்டி குரூப்பிலுள்ள ஐந்து எஸ்டேட்டுகளையும் ஒரே நேரத்தில் இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்பட்டதையும் அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை கம்பெனி. போராட்டத்திற்கு முன்பு நடைமுறையில் இருந்த ஓரிரு சலுகைகளையும் பறித்து, முன்னிலும் அதிகமாக தொழிலாளர்களை நசுக்க ஆரம்பித்தது கம்பெனி.
அதன் ஒரு பகுதியாக, போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கும், போராட்டக்காரர்களின் குடும்பத்தில் இருக்கும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு முன்புபோல வேலை தர மறுத்தது கம்பெனி. எஸ்டேட்டில் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுந்தான் வீடும், சட்டப்படியான உரிமைகளும் கொடுக்கப்படும். தற்காலிகத் தொழிலாளர்களுக்கு வீடு கிடையாது. வேலையை விட்டுவிடலாம் அல்லது அங்குள்ள உறவினர்கள் வீட்டில், அவர்களோடு சேர்ந்து அவர்கள் தயவில் தங்கிக்கொள்ளலாம். அது அவர்கள் பாடு. கம்பெனிக்கு அதைப்பற்றி யாதொரு கவலையும் கிடையாது.
தற்காலிகத் தொழிலாளர்களுக்கு தினமும் வேலை கிடையாது, கூப்பிட்டால் ஞாயிற்றுக் கிழமையும் வேலைக்கு வர வேண்டும், குறிப்பிட்ட கிலோ கணக்கிற்கு ஒரு கிலோ தேயிலை குறைவாகப் பறித்தாலும் அடுத்து இரண்டு வாரத்துக்கு வேலை கிடையாது, கம்பளி, தாட்டு கிடையாது, எஸ்டேட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதற்கான கட்டணத்தைச் செலுத்திட வேண்டும். கம்பெனிக்குத் தேவை இருந்தபோதிலும், தனது நிர்வாக நலனுக்காக தற்காலிகத் தொழிலாளர்களுக்கு அவ்வப்போது வேலை மறுக்கப்பட்டது. தங்களுக்கு உடன்படாத தற்காலிகத் தொழிலாளர்களை நீண்டகாலமாக வேலை நிரந்தரம் செய்யாமல் வைத்திருப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டது கம்பெனி.
இந்த நிலையில், போராட்டத்தின் மூலம் வெளி உலகில் கிடைத்த தொடர்புகளின் வாயிலாய், நீண்ட காலமாய் தற்காலிகத் தொழிலாளர்களாக வைக்கப்பட்டிருக்கும் தங்களை எஸ்டேட்டில் பணி நிரந்தரம் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மனு செய்தார்கள். சட்டம் வரையறுத்துள்ள நிபந்தனைகளுக்குள் வந்ததால், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆய்வாளர் 30.09.1999 அன்று நாலுமுக்கு எஸ்டேட்டைச் சேர்ந்த 122 தற்காலிகத் தொழிலாளர்களை, பணி நிரந்தரம் செய்யச்சொல்லி எஸ்டேட் நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அந்த 122 தற்காலிகத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எஸ்டேட்டில் தங்கி இருந்து, எஸ்டேட்டில் தொழிலாளர்களாக வேலைபார்த்து வருபவர்கள். மாதத்திற்கு ஒரு வாரமாவது அவர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிடும் கம்பெனி. அவ்வாறு விடுமுறை கொடுக்காமல், நிரந்தரத் தொழிலாளர்களைப் போல எல்லா நாட்களிலும் வேலைக்கு எடுத்துக்கொண்டால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். அதனைத் தவிர்ப்பதற்காக கம்பெனி பல ஆண்டுகளாக இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தது.
நினைத்த மாத்திரத்தில் மலையில் இருந்து கீழே இறங்கி வேறு வேலைக்குப் போய்விடும் தூரம் இல்லை எஸ்டேட்டுக்கும் ஊர்நாடுகளுக்கும். அதனால் சில சமயங்களில் மாதத்திற்கு ஒரு வேலைகூட இல்லாமல், தற்காலிகத் தொழிலாளர்கள் எஸ்டேடுக்குள் முடங்கி இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மொத்த எஸ்டேடும் ஒரே உரிமையாளருக்குச் சொந்தமானது. அதனால் எஸ்டேட்டில் வசிக்கும் ஒருவர், அந்த எஸ்டேட்டில் வேலைபார்க்கவில்லை என்றால், அவரால் வேறு எங்கும் வேலைக்குச் செல்லமுடியாது. எஸ்டேட்டில் ஒருவருக்கு வேலை இல்லை என்றால் அவரால் வருமானம் ஈட்டக்கூடிய வேறு எந்த வேலையையும் அங்கிருந்து கொண்டு செய்யமுடியாது. இது நன்கு தெரிந்திருந்தாலும், எஸ்டேட் நிர்வாகம் தொடர்ந்து குறிப்பிட்ட அளவிலான தொழிலாளர்களை தற்காலிகத் தொழிலாளர்களாகவே வைத்து வந்தது. ஆனாலும் வேறு வழி இல்லாமல் எஸ்டேட்டில் தங்கி இருந்து தற்காலிகத் தொழிலாளர்களாக பலர் வேலைபார்த்து வந்தனர்.
இதுபோன்று வரப்பெற்ற மனுக்களை கவனத்தில் கொண்ட தமிழ்நாடு அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைச் செயலாளர், தமிழ்நாடு முழுவதும் தேயிலைத் தோட்டங்களில் இதுபோல நீண்டகாலமாய் பணிபுரியும் தற்காலிகத் தொழிலாளர்களை கணக்கில் எடுத்து, அவர்களில், இரண்டு ஆண்டுகளில் 480 வேலை நாட்கள் வேலைபார்த்தவர் எனும் சட்ட வரையறைக்குள் வருபவர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க, அந்தந்த கம்பெனிகளுக்கு பகுதி சார்ந்த தோட்டத்தொழிலாளர் ஆய்வாளர்களை உத்தரவு பிறப்பிக்க அறிவுறுத்தினார்.
இவ்வாறு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள விபரம் எதுவும் எஸ்டேட்டில் வேலை செய்துவந்த தொழிலாளர்களுக்கு தெரியவந்திருக்க வாய்ப்பில்லை. அப்போதைய கூலி உயர்வினால் நாளொன்றுக்கு ரூ.13/-முதல் ரூ.18/-வரையிலான கூலி அதிகரிப்பின் காரணமான நஷ்டம், அதனோடு கூட, வேலை நிரந்தரம் குறித்த இந்த உத்தரவினையும் நடைமுறைப் படுத்தினால் தங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் இலாபத்தில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதை உணர்ந்தது எஸ்டேட் நிர்வாகம். தொழிலாளர் ஆய்வாளரின் அந்த உத்தரவை இரத்து செய்யவேண்டும் என்று கோரி, 2000 ஆவது ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு தேயிலைத்தோட்ட கம்பெனிகள் வழக்கு தாக்கல் செய்தன. அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடையும் பெற்றது. அதன்பிறகு அந்த வழக்கு 10 ஆண்டுகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
29.01.2010 அன்று அந்த வழக்கில் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. மூத்த வழக்கறிஞர்கள் பலரையும் நியமித்து, கடைசி நொடி வரையிலும் அந்த உத்தரவினை இரத்து செய்ய பல விதங்களில் நீதிமன்றத்தில் பல்வேறு விதமான வாதங்களை முன்வைத்தது கம்பெனி. ஆனால் தொழிலாளர்கள் நலன் சார்ந்து பல்வேறு வழக்குகளை நடத்தி முதிர்ந்த அனுபவம் உள்ள நீதிபதி சந்துரு முன்பாக அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது கம்பெனியின் துரதிஷ்டம். தொழிலாளர்கள் தரப்பில் அழுத்தமாக வாதங்களை வைக்கவேண்டிய தேவை எதுவும் இல்லாமல் அவர் பார்த்துக் கொண்டார். இடைக்காலத் தடை வாங்கி, பத்து ஆண்டுகளாக வழக்கினை விசாரணைக்குக் கொண்டுவராமல் சாதுர்யமாகக் கடத்திய நிர்வாகங்களைக் கண்டித்ததுடன், கம்பெனி தொடர்ந்த அந்த வழக்கினை ரூ.2,000/- செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்து, தற்காலிகத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யவேண்டும் என்ற தோட்டத் தொழிலாளர்கள் ஆய்வாளரின் உத்தரவினை உறுதி செய்தார்.
இந்தத் தீர்ப்பின் பலனாய், நாலுமுக்கு எஸ்டேட்டைச் சேர்ந்த அந்த 122 தற்காலிகத் தொழிலாளர்களில், 2010ல் பணியிலிருந்த அனைவரும் எஸ்டேட் நிர்வாகத்தால் நிரந்தரத் தொழிலாளர்கள் ஆக்கப்பட்டார்கள். இந்த வழக்கு விபரம், அதன் பின்னணி குறித்து எதுவும் தெரியாமல் அதற்கு கொஞ்சம் முன்னர் நிரந்தரத் தொழிலாளர் ஆக்கப்பட்டவர்களில் எனது சித்தி ஸ்டெல்லாவும் ஒருவர். அந்த வேலை அவரது வாழ்வில் பெறும் நம்பிக்கையைக் கொடுத்தது. வாழ்வின் மீதான பிடிப்பில், இன்று கிராமத்தில் சொந்தமாக ஒரு வீடு கட்டிவிட்டாலும், கூடுதல் ஓய்வுதியம் உள்ளிட்ட பயன்களுக்காக இன்னமும் எஸ்டேட்டில் வேலைபார்த்து வருகிறார்.
நாலுமுக்கு எஸ்டேட்டைச் சேர்ந்த சாலமோன் என்ற தொழிலாளி, அவரது பணித்திறனின் காரணமாக, தேயிலைக் காட்டில் கங்காணியாக நியமிக்கப்பட்டவர். கூலி உயர்வு போராட்டம் ஆரம்பித்த காலத்தில் தகுதிகான் பருவத்தில் (probationary period) இருந்த அவர், குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தவுடன் கங்காணியாக பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டியவர். ஆனால் அவர் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து நிர்வாகத்துக்கு எதிராக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்காக “பணியில் திருப்தியில்லை” என்று காரணம் காட்டி 16.07.1999 அன்று பதவி இறக்கம் செய்யப்பட்டு, மீண்டும் தொழிலாளியாக ஆக்கப்பட்டார். எஸ்டேட்டிலிருந்து ஓய்வு பெறும் நாள் வரையிலும், அவர் தொழிலாளியாகவே வேலைபார்த்து தனது பணி கணக்கினை முடித்தார்.
ஊத்து எஸ்டேட்டைச் சேர்ந்த தற்காலிகத் தொழிலாளர்கள் 148 பேரை நிரந்தரத் தொழிலாளர்களாக ஆக்கவேண்டுமென 10.09.1999 அன்றும், 22 பேரை நிரந்தரத் தொழிலாளர்களாக ஆக்கவேண்டும் என்று 29.12.2003 அன்றும் தோட்டத் தொழிலாளர் ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக்கோரி 2000 / 2004 ஆவது ஆண்டுகளில் எஸ்டேட் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அந்த இரு வழக்குகளும், நாலுமுக்கு எஸ்டேட் தொழிலாளர்களுக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் 28.11.2017 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
வேறு போக்கிடம் ஏதுமில்லாமல், ஒரு சமயம் எஸ்டேட்டில் பணி ஓய்வு பெற்று கணக்கு முடித்த தொழிலாளர்கள் பலரும், எஸ்டேட்டில் தற்காலிகத் தொழிலாளர்களாக வேலைபார்த்து வந்தனர். கூலி உயர்வு போராட்ட காலத்தில் ஏற்பட்ட கசப்புணர்வினைத் தொடர்ந்து 75% தொழிலாளர்கள் மெல்லமெல்ல எஸ்டேட்டிலிருந்து வெளியேறிவிட்டனர்.
தேவைக்கேற்ற எண்ணிக்கையில் நிரந்தரத் தொழிலாளர்களே இல்லாமல் போன நிலையில், எஸ்டேட்டில் கடந்த சில ஆண்டுகளாக தற்காலிகத் தொழிலாளர்கள் என்ற ஒரு பிரிவினரே இல்லாமல் போய்விட்டனர்.
படங்கள்: மாஞ்சோலை செல்வகுமார்