இந்தியா – இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி வரும் வெள்ளிக்கிழமை (2 பிப்ரவரி) விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும். இந்த போட்டியில் இந்திய அணிக்கான 11 பேர் கொண்ட அணி என்னவாக இருக்கும் என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. இங்கிலாந்திடம் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணியில் 4 முக்கிய வீரர்கள் இல்லை. விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், முகமது ஷமி ஆகியோர் இந்த போட்டியில் விளையாட மாட்டார்கள்.
இந்தியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில் மற்றும் மிடில் ஆர்டரில் விளையாடும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரும் கடந்த சில போட்டிகளாக மோசமான ஃபார்மில் உள்ளனர். ஷுப்மன் கில் கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் 11 இன்னிங்ஸில் எந்த அரைசதம் கூட அடிக்கவில்லை. ஷ்ரேயாஸ் அய்யரும் கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் 10 இன்னிங்ஸில் எந்த அரைசதம் கூட அடிக்கவில்லை.
இந்த இருவரில் ஒருவருக்கு அல்லது இருவரையும் இரண்டாவது டெஸ்ட்டில் இருந்து விலக்கிவிட்டு, ரஜத் படிதார் அல்லது சர்பிராஸ் கான் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று பேசப்படுகிறது. ரஜத் படிதார் மற்றும் சர்பிராஸ் கான் இருவரும் அண்மைக்காலமாக சிறப்பாக விளையாடி அபாரமான ஃபார்மில் உள்ளனர். அவர்கள் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிக தென்படுகிறது.
அதேபோல் முன் வரிசையில் இறங்கும் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட பிளேயர்கள் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும். இதனை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். ஒருநாள் மற்றும் 20 ஓவர் பார்மேட்டில் விளையாடுவதைப் போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அணுகுமுறை காட்டினால் அணியின் வெற்றி பெறுவது கடினம் என அடிக்கோடிட்டுள்ள அவர்கள், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் இந்திய அணி மாற்றம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான சாத்தியமான 11 பேர் கொண்ட அணி பின்வருமாறு:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில்/ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் அய்யர்/சர்பிராஸ் கான், கேஎஸ் பர்த் (விக்கெட்கீப்பர்), ராவிச்சந்திரன் அஷ்வின், அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர்/குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.