தேனி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவி. இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் அமைந்துள்ள இந்தத் தலத்துக்கு தமிழகம் மட்டுமில்லாது கேரளா உள்ளிட்ட பிறமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தமிழத்திலேயே முதல் முறையாக இப்பகுதியில் ‘பறவைகள் காணல் துறை’ உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பறவைகளை கண்டு ரசிக்கவும், இரைச்சல் இல்லாமல் பறவைகளின் இனிமையான சப்தங்களை ரசிக்கவும், அரிய வகை மரங்களையும் பற்றியும் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வாரத்தில் சனி, ஞாயிறு மட்டும் காலை 6 மணி முதல் 8 மணி வரை 200 ரூபாய் கட்டணம் செலுத்தி பறவைகளை கண்டு ரசிக்கலாம். 86674-71942 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு 15 வயதுக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்யலாம். முதலில் முன்பதிவு செய்யும் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பதினைந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் வர அனுமதிக்கிறார்கள். அவர்களுக்கு 100 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறார்கள். பறவைகளைக் காண விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு 166 பறவைகள் குறித்த விவரங்கள் தமிழ், ஆங்கிலத்தில் விளக்கக் கையேடு, காலை உணவு, பைனாகுலர் மற்றும் காலை தேநீர், உணவு வழங்கப்படும். இதற்காக மூன்று வழிகாட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பறவைகள் பற்றியும், மரங்கள் குறித்தும் கூறிக் கொண்டே ட்ரெக்கிங் அழைத்துச் செல்வார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக இணை இயக்குநர் ஆனந்த், “நான் சிறுவயதில் பள்ளியில் இருந்து இதுபோன்று வனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தேன். அதனால்தான் வனத்தை பாதுகாக்கக்கூடிய இடத்திற்கு வந்திருக்கிறேன்.
இத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்களுக்குப் பறவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். பயணிகளை வனத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன் யானைகள் நடமாட்டம் இருக்கிறதா எனப் பார்க்க ஏற்கெனவே ஒரு டீம் உள்ளே இருப்பார்கள். அதன்பிறகு பாதுகாப்பான முறையில் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இதில் பறவைகள் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்களை அழைத்து அவர்களையும் பறவைகள் குறித்துப் பேச வைக்கிறோம். இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில் கலந்து கொண்டவர்கள் மங்கோலியாவிலிருந்து வந்திருந்த அரிய வகை பறவையை கண்டு ரசித்தனர். பறவைகள் வனத்தின் ஓர் அங்கம். இதனால் மக்களுக்கு வனத்தின் மீது புரிதல் ஏற்படும். பறவைகளின் எச்சங்களில் இருந்து வனம் செழிப்பாகிறது. இதற்காகத்தான் இந்த பறவைகள் காணல் துறையை ஏற்படுத்தி உள்ளோம்” என்றார்.