திருப்பூரில் உழவர் சந்தைக்கு அருகே வியாபாரிகள் கடை அமைப்பதால் தென்னம்பாளையத்தில் விளைபொருள்களை விற்பனை செய்யும் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்-பல்லடம் சாலையில் தென்னம்பாளையம் பகுதியில் உழவர் சந்தை மற்றும் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. உழவர் சந்தையில் நாள்தோறும் அதிகாலை திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் விளை நிலங்களில் விளையும் பொருள்களை கொண்டு வந்து உழவர் சந்தையில் கடைகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அதே அதிகாலை நேரத்தில் உழவர் சந்தைக்கு முன் பகுதியில் பல்லடம் சாலையில் வியாபாரிகள் கடை அமைத்து காய்கறிகளை விற்பனை செய்வதால் பொதுமக்கள் சந்தைக்குள் வராமலே சாலையோரத்தில் உள்ள கடைகளில் பொருள்களை வாங்கிச் சென்று வருகின்றனர். இதனால், உழவர் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருள்கள் விற்பனையாகாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பலமுறை புகார் தெரிவித்தும் மனு அளித்தும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதன் தொடர்ச்சியாக, சாலையோர கடைகளுக்கு போட்டியாக புதன்கிழமை அதிகாலை விவசாயிகளும் பல்லடம் சாலையில் தங்கள் விளை பொருள்களை வைத்து விற்பனை செய்தனர். இதனால், பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையேற்க மறுத்த விவசாயிகள் தொடர்ந்து சாலையோரங்களிலேயே கடைகளை நடத்தினர். சாலையோர கடைகளை அப்புறப்படுத்தும் வரை தொடர்ந்து சாலையோரங்களிலேயே தாங்களும் கடை நடத்தப் போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறுகையில், “திருப்பூர் தெற்கு உழவர் சந்தை, தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் விவசாயிகள் பயன்பெறும் சந்தைகளில் ஒன்றாகவும், அதிக அளவில் வியாபாரம் நடக்கும் சந்தையாகவும் வளர்ந்து வருகிறது. உழவர் சந்தை நடக்கும் நேரத்தில் பல்லடம் சாலையின் இருபுறமும் வியாபாரிகள் சாலையோர காய்கறிக் கடைகளை அமைத்தும், இதுதொடர்பான அரசாணைக்கு விரோதமாகவும் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், 2012-இல் இருந்து தற்போது வரை நான்கு முறை திருப்பூர் கோட்டாட்சியர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி உத்தரவுகள் பிறப்பித்தும் அதிகாலை நேரத்தில் வியாபாரிகள் கடை அமைப்பதை தடுக்க போடப்பட்ட எவ்வித உத்தரவும் அமலாகவில்லை.
திருப்பூர் மாநகராட்சி அரசாணைப்படி, உழவர் சந்தை நடக்கும் நேரத்தில் கடைகளை அடைக்காமல் தொடர்ச்சியாக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. மாநில நெடுஞ்சாலைத் துறை, வருவாய் துறை, காவல்துறையும் விவசாயிகள் போராட்டம் நடக்கும் நாள்களில் மட்டும் கடைகளை அகற்றி விட்டு சென்று விடுகிறார்கள்.
இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படாவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்” என்றார். அதிகாலை நேரத்தில் பல்லடம் சாலையில் கடைகள் அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகாக கைவிடப்பட்டது.