உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Perception Index) 2023 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை, ‘டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக, ‘சட்டத்தின்படி ஆட்சி செய்து ஊழலை எதிர்த்துப் போராடும்’ நாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு ஊழல் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும். 100 மதிப்பெண்களுக்கு நாடுகள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அவற்றின் வரிசை அமைகிறது.
2023 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் மொத்தம் 180 நாடுகள் இடம்பெற்றுள்ளன.மொத்தம் 180 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியா பெற்றுள்ள மதிப்பு 100-க்கு 39, பிடித்துள்ள இடம் 93. கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியா இந்தப் பட்டியலில் 85-வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நமது அண்டை நாடான பாகிஸ்தான், 29 மதிப்பெண்களுடன் 133-வது இடத்தில் இருக்கிறது. 43 மதிப்பெண்கள் பெற்று சீனா 76-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
முதல் மூன்று நாடுகள்: பட்டியலில் 90 மதிப்பெண்கள் பெற்ற டென்மார்க், தொடர்ந்து 6-வது ஆண்டாக ஊழலை எதிர்க்கும் முதல் நாடாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து, 87 மதிப்பெண்களுடன் பின்லாந்து இரண்டாவது இடத்தையும், 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. நார்வே, சிங்கப்பூர், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, லக்ஸம்போர்க் நாடுகள் ஊழலை எதிர்க்கும் நாடுகளில் டாப் 10 வரிசையில் உள்ளன. அமெரிக்கா 69வது இடத்தில் உள்ளது.
உள்நாட்டுப் போர்களும் ஊழலும்! இந்தப் பட்டியலில் சோமாலியா கடைசி இடத்தில் இருக்கிறது. சோமாலியாவைத் தொடர்ந்து வெனிசுலா, சிரியா, தெற்கு சூடான், ஏமன் ஆகிய நாடுகள் ஊழல் மலிந்த நாடுகளாக உள்ளன. உள்நாட்டுக் கலவரங்கள் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. தென் கொரியா (63), அர்மேனியா (47), வியட்நாம் (41), மாலத்தீவு (39), அங்கோலா (33), உஸ்பெகிஸ்தான் (33) ஆகிய நாடுகள்இந்தப் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளன. அடைப்புக்குறிக்குள் இருப்பவை நாடுகள் 100-க்கு பெற்ற மதிப்பெண். எல் சால்வடார் (31), ஹோண்டூராஸ் (23), லைபீரியா (25), மியான்மர் (20), நிகாராகுவா (17), இலங்கை (34), and வெனிசுலா (13). அர்ஜென்டினா (37), ஆஸ்திரியா (71), போலந்து (54), துருக்கி (34) ஆகிய நாடுகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன.