உத்தரப்பிரதேச மாநிலத்தில் நொய்டா சர்வதேச விமான நிலையம் அருகே திரைப்பட நகரம் அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் மும்பை வந்து பாலிவுட் பிரபலங்களைச் சந்தித்துப் பேசினார்.
அவர்களிடம் உத்தரப்பிரதேசத்தில் அமையவிருக்கும் திரைப்பட நகரில் வந்து படப்பிடிப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டார். இதற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நொய்டாவில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 6 கி.மீ தூரத்தில் புதிய திரைப்பட நகரை உருவாக்க மாநில அரசு டெண்டர் விட்டிருந்தது. இதில் நடிகர் அக்ஷய் குமார், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உட்பட பலரும் டெண்டர் கொடுத்திருந்தனர்.
இதில் போனி கபூர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட டெண்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் போனி கபூரின் பேவியூ என்ற கூட்டு நிறுவனம் 8 ஆண்டுகளில் நொய்டாவில் திரைப்பட நகரத்தை உருவாக்கும். இந்நிறுவனம் வருமானத்தில் 18 சதவிகிதத்தை மாநில அரசுக்குக் கொடுக்க சம்மதம் தெரிவித்திருக்கிறது. போனி கபூருக்கு இந்நிறுவனத்தில் 48 சதவிகித பங்கு இருக்கிறது. இது தவிர பிரமேஷ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திற்கு 26 சதவிகிதமும், நொய்டா சைபர்பார்க் நிறுவனத்திற்கு 26 சதவிகிதமும் பங்கு இருக்கிறது.
பிரமேஷ் நிறுவனம் இத்திட்டத்திற்கு தேவையான நிதியை ஏற்பாடு செய்யும். போனிகபூர் இந்தத் திரைப்பட நகரை பராமரிப்பார். இது குறித்து போனி கபூர் அளித்த பேட்டியில்,”சொந்தமாக ஸ்டூடியோ கட்டவேண்டும் என்ற கனவு நீண்ட நாட்களாக இருந்தது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. எனது மூன்று படங்கள் உத்தரப்பிரதேசத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. எங்களது பிசினஸ் பார்ட்னருடன் சேர்ந்து ஸ்டூடியோ கட்டப்படும். வெறும் கதையுடன் வரும் ஒருவர் முழு படத்துடன் செல்லும் வகையில் இந்த ஸ்டூடியோ கட்டப்படுகிறது. நொய்டா விமான நிலையம் அருகில் திரைப்பட நகரம் அமைக்கப்படுவதால் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.இந்திய மற்றும் சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்களை கவரும் விதமாக சர்வதேச ஸ்டூடியோ போன்று புதிய ஸ்டூடியோ கட்டப்படும்” என்றார்.
திரைப்பட நகரத்திற்குத் தேவையான நிலத்தை மாநில அரசு 6 மாதத்திற்குள் கொடுக்க இருக்கிறது. வரும் ஜூன் மாதம் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. முதல் மூன்று ஆண்டில் ஸ்டூடியோவும் திரைப்பட இன்ஸ்டிடியூட்டும் தயாராகிவிடும். ஒட்டுமொத்த திரைப்பட நகரமும் 8 ஆண்டில் கட்டி முடிக்கப்படும். நடிகர் அக்ஷய் குமார் சார்பாக சூபர் டெக்னோபில்ட் என்ற நிறுவனம் இத்திரைப்பட நகரை உருவாக்க டெண்டர் கொடுத்திருந்தது. ஆனால் அந்நிறுவனம் வருமானத்தில் 10.8 சதவீதம் மாநில அரசுக்கு கொடுப்பதாக தெரிவித்திருந்தது.