கர்நாடகாவில் கடந்த 2008ல் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. தென் மாநிலங்களிலேயே பா.ஜ.,வை முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் என்ற பெருமை, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு உண்டு.
லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த அவருக்கு, கர்நாடகாவின் வட மாவட்டங்களில் செல்வாக்கு உள்ளது. ஆனால் மாண்டியாவில், பா.ஜ., இன்னும் தலை நிமிரவே இல்லை.
மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளிலும், மாண்டியா லோக்சபா தொகுதிகளிலும் காங்கிரஸ், ம.ஜ.த., மாறி, மாறி வெற்றி பெற்று வருகின்றன.
முதல் வெற்றி
கடந்த 2018 ல் நடந்த சட்டசபை தேர்தலில், மாண்டியாவின் கே.ஆர்.பேட்டில் ம.ஜ.த., சார்பில் போட்டியிட்ட, நாராயண கவுடா வெற்றி பெற்றார். ஆனால் 2019ல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.,வில் இணைந்தார். இடைத்தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முதல் முறையாக மாண்டியா மாவட்டத்தில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதால், பா.ஜ.,வினர் உற்சாகத்தில் திளைத்தனர். 2019 ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., ஆதரவுடன் சுமலதா எம்.பி., ஆனார். இது அக்கட்சிக்கு மேலும் உத்வேகத்தை கூட்டியது.
கடந்த மே மாதம் நடந்த, சட்டசபை தேர்தலின் போது, மாண்டியாவின் ஏழு தொகுதிகளையும் கைப்பற்ற, பா.ஜ., மாஸ்டர் பிளான் போட்டது. மாண்டியாவில் பால் உற்பத்தி மையத்தையும், அமித்ஷா திறந்து வைத்தார்.
பத்து வழிச்சாலையை வைத்தும் பிரசாரம் செய்தனர். ஆனால் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.,வால் வெற்றி பெற முடியவில்லை. ஆறு இடங்களில் காங்கிரசும், ஒரு இடத்தில் ம.ஜ.த.,வும் வெற்றி பெற்றது.
தந்திரம் பலிக்குமா?
இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், சுயேச்சை எம்.பி., சுமலதா, பா.ஜ.,வில் இணைந்து போட்டியிடும் திட்டத்தில் இருந்தார். ஆனால், மாறிவிட்ட அரசியல் சூழ்நிலையில், பா.ஜ., – ம.ஜ.த., கூட்டணி அமைத்து உள்ளது. மாண்டியாவை ம.ஜ.த., கேட்டு வருகிறது. ஆனால் சுமலதா விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.
பா.ஜ., மேலிட தலைவர்களிடம், எனக்கே ‘சீட்’ வேண்டும் என்று, அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து உள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பு, அம்பரிஷ் இறந்து போனதால், மாண்டியாவின் மருமகள் என்று டயலாக் பேசி, மக்கள் முன்பு பரிதாப அலையை ஏற்படுத்தி, சுமலதா வெற்றி பெற்றார். ஆனால் இம்முறை அந்த தந்திரம் பலிக்குமா என்று தெரியவில்லை.
காத்திருக்கும் கொக்கு
மாண்டியாவில் வேட்பாளர்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில், ஒக்கலிகர் ஓட்டுகள் அதிக முக்கியத்துவம் வகிக்கிறது. குமாரசாமி ஒக்கலிகர் என்பதால், அந்த தொகுதியில் ம.ஜ.த., போட்டியிட்டால், வெற்றி எளிது என்று நினைக்கிறார்.
ஒருவேளை பா.ஜ., சுமலதாவுக்கு ‘சீட்’ கொடுத்தால், உள்ளடி வேலை பார்த்து அவரை ம.ஜ.த.,வினர் தோற்கடித்து விடும் வாய்ப்பு உள்ளது. இதனால் மாண்டியாவில் தங்களுக்கு என்று, ஒரு பிடித்தத்தை ஏற்படுத்த, பா.ஜ., தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தது.
ஆற்றில் மீனுக்காக, கொக்கு காத்திருப்பது போல காத்திருந்த, பா.ஜ.,வுக்கு மாண்டியா கெரேகோடு கிராமத்தில் நடந்து வரும், ஹனுமன் கொடி இறக்கப்பட்ட பிரச்னை ‘அல்வா’ போல கிடைத்து உள்ளது. ஏற்கனவே ராமர் கோவில் திறப்பு விழாவை, காங்கிரஸ் புறக்கணித்ததால் ஹிந்து அமைப்பினர், காங்கிரஸ் கட்சி மீது கோபத்தில் உள்ளனர். இப்போது ஹனுமன் கொடியை இறக்கி, ஹிந்துக்கள் உணர்வுகளை அரசு புண்படுத்தியதாக கூறி, போராட்டம் நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
உன்னிப்பாக கவனிப்பு
இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தின் மூலம், காங்கிரசை புறக்கணித்து, பா.ஜ.,வுக்கு மக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற்றால், ஒக்கலிகர் கோட்டையில் பா.ஜ., கொடி பறக்கவும் வாய்ப்பு உண்டு. கெரேகோடு கிராமத்தில் நடந்து வரும் பிரச்னையை, பா.ஜ., மேலிட தலைவர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இந்த பிரச்னையை பயன்படுத்தி, மாண்டியாவில் வெற்றி கொடி நாட்ட வேண்டும் என்றும், கர்நாடகா பா.ஜ.,வினருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இதனால் பெரிய அளவில் போராட்டம் நடத்தி உள்ளனர். கெரேகோடு பிரச்னை பா.ஜ.,வுக்கு வரமாக அமையுமா என்பதற்கு, காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்