6 நாள் பாத யாத்திரைக்குப் பின் அயோத்தி ராமர் கோயிலில் வழிபட்ட 350 இஸ்லாமியர்கள்!

அயோத்தியா: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து அயோத்திக்கு பாத யாத்திரையாக வந்து 350 இஸ்லாமியர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த இந்த இஸ்லாமியர்கள், கடந்த 25-ம் தேதி லக்னோவில் இருந்து தங்கள் பாத யாத்திரையை தொடங்கி உள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் சயீத், “லக்னோவில் இருந்து கடந்த 25-ம் தேதி புறப்பட்டோம். ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் வரும்போதும் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு பிறகு புறப்படுவோம். இரவு நேரங்களில் ஓரிடத்தில் தங்கி பிறகு காலையில் மீண்டும் பாத யாத்திரையை தொடருவோம்.

இவ்வாறு 150 கிலோ மீட்டர் தொலைவை கடும் குளிருக்கு மத்தியில் 6 நாட்களில் கடந்து அயோத்தி வந்தோம். அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோயிலில் உள்ள குழந்தை ராமரை தரிசித்து வழிபட்டோம். இது மறக்க முடியாத நெகிழ்ச்சியூட்டும் தருணம். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை, நல்லிணக்கம் ஆகியவையே மிகவும் முக்கியம் என்ற செய்தியை நாங்கள் இதன்மூலம் தெரிவிக்கிறோம்” என கூறினார்.

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தவருமான ஷெர் அலி கான், “பகவான் ராமர் நமது முன்னோர். நம் அனைவருக்குமே அவர் முன்னோர். சாதி, மதம் ஆகியவற்றைவிட நாட்டின் மீதான அன்புக்கும் நல்லிணக்கத்துக்குமே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். எந்த ஒரு மதமும் மற்றவர்களை விமர்சிக்கவோ, கேலி செய்யவோ, வெறுக்கவோ கற்றுத்தரவில்லை” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.