ராஞ்சி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல் முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜனவரி 28, 29-ம் தேதிகளில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி டெல்லிக்கு தனி விமானத்தில் சென்ற முதல்வர் ஹேமந்த் சோரன், அங்கிருந்து ராஞ்சிக்கு ரகசியமாக திரும்பினார். அவர் விமானத்தில் வராமல், தனி காரில் ரகசிய வழியாக வந்துள்ளார்.
இதற்கிடையே, டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார், ஆவணங்கள் சிலவற்றையும் அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ராஞ்சியில் விசாரணை நடத்துவதற்காக நேற்று பிற்பகலில் அமலாக்கத் துறை அதிகாரிகள் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் குவிக்கப்பட்டனர். ஆனால், முதல்வரிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ஏற்கெனவே, ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவ படையினர், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ராஞ்சியில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், பிற்பகல் 2 மணி முதல் முதல்வர் ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேர விசாரணைக்கு பிறகு, இரவு 8.30 மணி அளவில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். இதை கண்டித்து ஜேஎம்எம் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநரிடம் ராஜினாமா கடிதம்: முன்னதாக, முதல்வர் ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் நெருங்கிய ஆதரவாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சம்பய் சோரன் பதவியேற்க உள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்பதற்கான ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் ஜேஎம்எம் கட்சி எம்எல்ஏக்கள் வழங்கினர்.
அமலாக்கத் துறை மீது வழக்கு: முன்னதாக, அமலாக்கத் துறை மீது முதல்வர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்துள்ளார். டெல்லியில் உள்ள தனது வீட்டில் அமலாக்கத் துறை சட்ட விரோதமாக சோதனை நடத்தி பொருட்களை எடுத்துச் சென்றதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஞ்சியில் உள்ள மூத்த போலீஸ் அதிகாரி சந்தன் குமார் சின்ஹா கூறியதாவது: அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்படி முதல்வர் ஹேமந்த் சோரன் புகார் கொடுத்துள்ளார். தனது பெயருக்கும், தங்கள் சமூகத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செயல்பட்டதாகவும், எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி டெல்லியில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு வந்ததாகவும், தன்னை பற்றி பொய்யான தகவலை பரப்பியதாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அமலாக்கத் துறை மூத்த அதிகாரிகள் கபில் ராஜ், தேவ்விரத் ஜா, அனுபம் குமார், அமன் படேல் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முதல்வர் ஹேமந்த் சோரன் எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர் என்பதால், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் அவர் புகார் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
மனைவியை முதல்வராக்க.. இந்நிலையில், தான் கைது செய்யப்பட்டால் தனது மனைவி கல்பனா சோரனை முதல்வராக்க, ஹேமந்த் சோரன் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலை ஹேமந்த் மறுத்தார். இந்நிலையில்தான் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் ரகசியமாக ஆலோசனை கூட்டம் நடத்தி சம்பய் சோரனை, ஹேமந்த் சோரன் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரகசிய கூட்டத்தின்போது ஜேஎம்எம் எம்எல்ஏக்களிடம் இருந்து முதல்வர் பெயரை குறிப்பிடாமல் ஆதரவு கடிதங்களையும் ஹேமந்த் சோரன் பெற்றுள்ளார்.
ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனை முதல்வராக ஏற்பதற்கு ஜேஎம்எம் கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதனால்தான், மனைவியை முதல்வராக்காமல், தனது நண்பர் சம்பய் சோரனை முதல்வராக, ஹேமந்த் தேர்வு செய்துள்ளார் என ஜேஎம்எம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
யார் இந்த சம்பய் சோரன்? ஜார்க்கண்ட் மாநில போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சம்பய் சோரன். செராய் கெல்லா தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ள சம்பய் சோரனுக்கு 67 வயது ஆகிறது. இதுவரை 5 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.