‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அசோச் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு ஆகியோர் நடிப்பில் கிரிக்கெட் திரைப்படமாக உருவாகி வெளியாகியிருக்கிறது, ‘ ப்ளூ ஸ்டார்’. இத்திரைப்படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, இயக்குநர் பா. ரஞ்சித் எனப் பலரும் கலந்துக் கொண்டனர் உரையாற்றினர்.
இந்த விழாவில் பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன், ” எனக்கு இது கனவு மாதிரி இருக்கு. நான் நடிச்ச படத்துல ‘சக்சஸ்’ங்கிற வார்த்தை வந்தது இந்த திரைப்படத்திற்குதான். இந்த படத்தோட பயணம் தொடங்குனதுல இருந்து இயக்குநர் அதிகமாக என்கிட்ட’டென்ஷனாக இருக்கு கீர்த்தி’னு சொல்லிதான் கேட்டிருக்கேன்.” என சிரித்தவர், ” இந்த படத்துல கடைசியாக ஒரு வசனம் வரும். இந்த வானத்துக்குக் கீழ, மரம், செடி, கொடிக்கு கீழ எல்லாம் சமம்தான்னு வசனம் வரும். அதுதான் என் எண்ணமும்கூட.” என பேசி முடித்தார்.
நிகழ்வின் இறுதியில் வந்து பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், “ப்ளூ ஸ்டார் திரைப்படத்தை வெற்றிப் படமாக ஏற்றுக் கொண்ட மக்களுக்கு நன்றி. அட்டகத்தி படத்தை நான் பண்ணினதுக்குப் பிறகு என்கிட்ட சின்ன படங்கள் பண்றதுக்குதான் கேட்டாங்க. ஆனா, ஜெயகுமாருக்கு பெரிய ஹீரோகிட்ட இருந்து போன் வந்திருக்கு. ‘பரியேறும் பெருமாள்’ படத்துக்குப் பிறகு மாரி செல்வராஜுக்கு அந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சது. அடுத்தாக கர்ணன் பண்ணாரு. என் அரசியலை நான் ரொம்ப நம்புறேன். நான் நம்புற தத்துவங்கள் என்னை வழி நடத்தும்னு நம்புறேன். என் அரசியலை புரிஞ்சுகிட்டவங்கதான் இங்க மேடையில இருக்காங்க. ‘ப்ளூ ஸ்டார்’ அச்சு அசலான வெற்றிப் படம். நீலம் தயாரிப்புல இருந்து வர்ற படங்களை பிரச்னைகளோடதான் சென்சார்ல அணுகுவாங்க.
இந்த மாதிரிதான் படம் இருக்கும்னு ஒரு மனநிலைக்கு வந்துருவாங்க. ‘ப்ளூ ஸ்டார்’ படத்துக்காக சென்சார் போனப்போ இந்த படம் வெளியாகக்கூடாதுன்னு வித்தியாசமான கருத்தை சொன்னாங்க. அதுக்கு கேள்வி கேட்டப்போ, ” சில பிரச்னைகள் இருக்கு. ரொம்ப கம்யூனலாக இருக்கு”னு சில விஷயங்கள் சொன்னாங்க. அதன் பிறகு ரிவைஸிங் கமிட்டிக்கு விண்ணப்பிச்சோம். படத்துல எதிர் அணி மற்றும் அதிலிருக்கிற வீரர்களோட பெயரை மாத்த சொன்னாங்க. ஒரு படம் எல்லோரும் சமம். வேறுபாடு இருக்கக்கூடாதுனு சொல்லுது.
இப்படியான கருத்துக்கு மாற்றுக் கருத்துள்ள ஆட்கள் சென்சார் போர்ட்ல இருக்காங்கனு நினைக்கும் போது வருத்தமாக இருக்கு. இந்த படத்துல ராஜேஷ் கதாபாத்திரம் ரஞ்சித்தோட அம்மாவை சுசிலானு பெயரை சொல்லிக் கூப்பிடுவான். ஆனா, அந்த படத்துலேயே ஒரு காட்சில ‘அம்மா’னு கூப்பிடுவான். அதுதான் இந்த படத்தோட வெற்றியாகப் பார்க்குறேன். அப்போ அவங்க வாஞ்சையோட வீட்டுக்குள்ள அழைப்பாங்க. இந்தக் காட்சியைப் பார்க்கும்போது தேம்பி அழுதேன். அந்த காட்சில அசோக்கும் ரொம்பவே நல்லா நடிச்சிருந்தான். எல்லோரும் இங்க ஒண்ணுதான். நாம சேர்ந்து இருந்தால்தான் வேறுபாடுகளை உடைக்க முடியும்னு உறுதியாகப் பேசின திரைப்படம், ‘ப்ளூ ஸ்டார்’. ” என்றவர் படக்குழுவினரை வாழ்த்தி விடைபெற்றார்.
முழு வீடியோவைக் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.