நாக்பூர்,
மராட்டியத்தின் நாக்பூர் நகரில் ஜரிபத்கா பகுதியை சேர்ந்தவர் பரத் கோஸ்வாமி (வயது 33). 2014-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சமீபத்தில் அவர் பரோலில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் 43 வயது பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த பரத், அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அந்த பெண் முன்பே, பரத்துக்கு நன்கு அறிமுகம் ஆனவர் என கூறப்படுகிறது.
வீட்டில் இருந்து வெளியே போகும்போது, அந்த பெண்ணின் 14 வயது மகளிடமும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு இருக்கிறார். இதன்பின், இந்த சம்பவம் பற்றி யாரிடத்திலாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என அச்சுறுத்தி விட்டு சென்றிருக்கிறார்.
இதுபற்றி அந்த பெண் அளித்த புகாரின் பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, பலாத்காரம் செய்ததற்காக ஐ.பி.சி. மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கோஸ்வாமியை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.