புதுடெல்லி: தகுதியான நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கும் என இடைக்கால பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தனது பட்ஜெட் உரையில், “வளர்ச்சியை எளிதாக்கும் வகையிலும், உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையிலான பொருளாதார அணுகுமுறையை மத்திய அரசு பின்பற்றும்” என்று தெரிவித்தார். மேலும், கர்ப்பப் பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம், ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி அறிமுகம், வருமான வரியில் மாற்றமில்லை என்பது போன்ற அறிவிப்புகள் இன்றைய இடைக்கால பட்ஜெட்டில் வெளியாகின.
அதேபோல், “ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும். அதன்படி, வீட்டின் மொட்டை மாடியில் சோலார் மின் உற்பத்தி கட்டமைப்பை நிறுவினால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 – 18,000 சேமிப்பாக கிடைக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும். தகுதியான நடுத்தர வர்க்கத்தினர் தங்களது சொந்த வீடு வாங்க அல்லது வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கும்” என்று அறிவித்தார். வாசிக்க > மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 – முக்கிய அம்சங்கள்