சென்னை: மத்திய இடைக்கால பட்ஜெட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த அறிவிப்பை விமர்சிக்கும் வகையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் “ஒரு சிறு திருத்தம். 15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும்” என்று கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தனது பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன், “கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடிக்கள், 3,000 புதிய ஐடிஐ, 319 பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும். ஏற்கெனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதனை குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன் “கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். ஒரு சிறு திருத்தம். 15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும்” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மதுரை எய்ம்ஸ்: பிரதமர் மோடி ஜனவரி 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டும் போது 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தார். மக்களவைத் தேர்தல் வாக்குறுதியாக கூறிய அவர், 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கவிட்ட நிலையில் தற்போது வரை கட்டுமானப் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இரண்டேகால் வருடங்கள் கழித்துதான், கடன் ஒப்பந்தம் மார்ச் 2021ல் செய்யப்பட்டது. கடன் ஒப்பந்தம் கையெழுத்தான உடன் பணி தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வரை மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மதுரை எம்.பி,யான சு.வெங்கடசேன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், தற்போது பட்ஜெட் உரையில் எய்ம்ஸ் தொடர்பான மேற்கோள்களுக்கு இவ்வாறாக பதில் கொடுத்துள்ளார்.