“அலங்கார வார்த்தைகள்…” – எதிர்க்கட்சிகள் உதிர்த்த கருத்துகள் @ இடைக்கால பட்ஜெட் 2024

புதுடெல்லி: மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணியளவில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்தியப் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் ஆழமான நேர்மறையான மாற்றத்தைக் கண்டுள்ளது என்றும், விலைவாசி – பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்றும் அவர் பட்டியலிட்டார். அதன்பிறகு பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, “இந்த பட்ஜெட் அனைவரையும் உள்ளடக்கியது; புதுமைகள் நிறைந்தது. தொடர்ச்சிக்கான நம்பிக்கையை இது அளித்துள்ளது” என்று பெருமிதம் தெரிவித்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் மத்திய இடைக்கால பட்ஜெட்டை வெகுவாக விமர்சித்துள்ளன. அவற்றின் தொகுப்பு பின்வருமாறு:

சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் கூறுகையில், ”இது இடைக்கால பட்ஜெட். இந்த பட்ஜெட் உரை அரசியல் உரை போலவே இருந்தது. சாமானிய மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. அரசாங்கத்தைப் புகழும் ஓர் அரசியல் அறிக்கை என்பேன். விவசாயிகளையோ, இளைஞர்களையோ பட்ஜெட் கண்டுகொள்ளவில்லை” என்றார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “எந்த ஒரு பட்ஜெட் வளர்ச்சிக்கானதாக இல்லையோ. எது மக்களுக்கானதாக இல்லையோ. அது பயனற்றதாகிவிடுகிறது. பாஜக அரசு பத்தாண்டுகளாக மக்கள் விரோத பட்ஜெட்டுகளை உருவாக்கி அவமானகரமான வரலாற்றை உருவாக்கியுள்ளது. நிச்சயமாக இந்த அவமானச் சின்னம் யாராலும் உடைக்கப்படாது. இனி அமையப்போவது நேர்மறையான அரசாங்கம்” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில், “இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டானது புதிய அரசு அமையும் வரை இந்திய அரசாங்கத்திடம் வழக்கமான பணிகளுக்குத் தேவையான நிதி இருக்கிறது என்பதை மட்டுமே பறைசாற்றியுள்ளது. வெற்று பட்ஜெட்டில் சுய தம்பட்டமும், சுய புகழ்ச்சியுமே இருந்தது. வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் அதில் வேறு எதுவுமே இல்லை” என்றார்.

சிவசேனா உத்தவ் பால் தாக்கரே பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே, “இறுதியாக இந்த அரசாங்கம் இந்தியாவில் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என நான்கு பிரிவுகள் இருக்கின்றன என்பதையாவது ஒப்புக் கொண்டுள்ளது. மோடி அரசு கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதனை கனத்த இதயத்துடன் தாக்கல் செய்தார். அவருக்கு நன்றி” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, “உண்மையான பட்ஜெட் ஜூலை 2024-ல் தாக்கல் செய்யப்படும். அப்போது அது மக்களுக்கு பலன் தரும். சுற்றுலாத் துறை மேம்படும் தொழிற்சாலைகள் வளர்ச்சி காணும். தேசம் வளம் பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டேனிஷ் அலி, “இந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு புதிய அறிவிப்பு ஏதுமில்லை” என்றார்.

திமுக எம்.பி. தயாநிதி மாறன், “எந்த ஒரு பெரிய மாற்றமும் இல்லாத பட்ஜெட். மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்” எனக் கூறினார்.

ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால், “இந்த பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது. நாட்டில் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும் அதிகரித்துள்ள நிலையில் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டை வகுத்துள்ளார்கள்” என்றார்.

காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி, “அதிகரித்துவரும் நிதிப் பற்றாக்குறை கவலை அளிக்கிறது. பட்ஜெட்டில் நிதியமைச்சர் சொல்லிய கணக்குகளைப் பார்க்கும்போது ரூ.18 லட்சம் கோடி வரை பற்றாக்குறை இருக்கிறது. இது இன்னும் அதிகரிக்கவே செய்யும்” என்று கவலை தெரிவித்தார்.

திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில், “அவர்கள் அடுத்த முழு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு வழிவகை செய்துள்ளனர். அந்த முழு பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம். தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். அதன் பின்னர் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே, “இந்த பட்ஜெட்டில் இருந்து நான் எதையுமே எதிர்பார்க்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாகவே அவர்கள் அலங்கார வார்த்தைகளால் விளம்பரம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள்“ என்று கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரஸ் எம்.பி. கொடுமுடி சுரேஷ் கூறுகையில், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமிருந்து சாமானியர்களின் நலன் சார்ந்து நாங்கள் எதையுமே எதிர்பார்ப்பதில்லை. நாட்டில் விலைவாசி உயர்வு பிரச்சினை உள்ளது. வேலைவாய்ப்பின்மை பிரச்சினை நிலவுகிறது. விவசாயிகள் பல்வேறு சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். ஆனால், அவற்றை சரி செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்த இடைக்கால பட்ஜெட் தேர்தலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது” என்றார்.

காங்கிரஸ் எம்.பி சசி தரூர், “இடைக்கால பட்ஜெட்டில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறுகிய உரைகளில் இதுவும் ஒன்று. பட்ஜெட் உரையில் பெரிதாக எதுவும் இல்லை. வழக்கம் போல் வார்த்தை ஜாலங்கள் மிகுந்து காணப்பட்டன. செயல்பாடுகளில் மிகக் குறைவான உறுதிப்பாடே இருந்தது. அந்நிய முதலீடுகள் கணிசமான அளவு குறைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளாமல் அது குறித்து நிதியமைச்சர் பேசி உள்ளார். நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம் போன்ற தெளிவற்ற மொழியில் அவர் பலவற்றை பேசி இருக்கிறார்.

புள்ளிவிவரங்கள் என்று வரும்போது மிகச் சில புள்ளிவிவரங்களையே அவர் கொடுத்திருக்கிறார். பொருளாதாரத்தின் குறிப்பிட்ட சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண போதிய தெளிவோ, விருப்பமோ இல்லாமல் முற்றிலும் பொதுமையில் பேசப்படும் வகையில் நிதி அமைச்சரின் உரை இருந்தது. இது மிகவும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “வேலையற்றோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் பட்ஜெட்டா. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களைக் கவர்வதற்காகவே தவிர இதில் வேறொன்றும் இல்லை” என்று கூறியுள்ளார். இதையும் படிக்க: > மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 – முக்கிய அம்சங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.