90’s மற்றும் 2K கிட்ஸ் இடையில் ஓர் இடைவெளி உண்டு. தலைமுறைகளுக்கு இடையேயான இடைவெளி பொதுவானது தான் என்றாலும், இந்த காம்போவுக்கான சண்டை சற்று சுவாரஸ்யமானது.
1981 முதல் 1996க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்தவர்களை `மில்லியனல்ஸ்’ அல்லது `90’ஸ் கிட்ஸ்’ என்று அழைக்கின்றனர். 2K கிட்ஸ் இவர்களை `பூமர்கள்’ என்று கிண்டலும் செய்வதுண்டு. 1997 முதல் 2012 ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களை `Gen Z’ தலைமுறையினர் அல்லது `2k கிட்ஸ்’ என அழைக்கின்றனர்.
இந்த இரண்டு தலைமுறையினருக்கு இடையே உணவு, டெக்னாலஜி, மெச்சூரிட்டி எனப் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. 90’s கிட்ஸ் இளமையாகவும், அவர்களை ஒப்பிடுகையில் 2K கிட்ஸ் வயதானவர்கள் போல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்தவொரு விஷயம் தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜோர்டான் ஹவ்லெட் என்பவர் ஒரு சோஷியல் மீடியா இன்ஃப்ளூயென்சர் மற்றும் 2k கிட். இவரது இன்ஸ்டா அக்கவுன்ட்டில் 7 மில்லியன் பாலோயர்ஸ் உள்ளனர்.
அடர்த்தியான தாடி, கண்ணாடி, நரை முடியோடு இருக்கும் இவரின் தோற்றம் பார்ப்பதற்கு பெரியவர் போலவே தெரிகிறது. இதை அவரே ஒப்புக் கொள்கிறார். இது குறித்த தனது மனக்குமுறலை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
அதில், `2K கிட்ஸுக்கு சீக்கிரமாகவே வயதாகிவிடுகிறதா’ என ஒரு பெண் கேள்வி கேட்க அதற்கு பதிலளித்த ஜோர்டான், “90’ஸ் கிட்ஸ் அவர்களது வயதை விட இளமையாக இருக்கிறார்கள். அதேசமயம் 2K கிட்ஸ் தங்களது வயதை விட வயதானவர்களாகத் தெரிகிறார்கள்.
இதை நீங்கள் நம்பவில்லையெனில் என்னைப் பாருங்கள். நான் ஒரு `Gen Z’. யாரும் இதை நம்புவதில்லை. நானும் என் அம்மாவும் வெளியில் செல்லும்போது, என் அம்மாவை தங்கை என நினைத்துக் கொள்கிறார்கள்.
எனது குடும்பத்தோடு ஹாங்அவுட் செல்கிறேன் என பிறரிடம் சொல்லும்போது, நான் என் குழந்தைகளை பற்றிச் சொல்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். எனக்கு குழந்தைகள் கிடையாது. நானே ஒரு குழந்தை தான். Zendaya-விற்கு என்னை விட வயது அதிகம். டாம் ஹோலண்ட் என்னை விட பெரியவர்.
`ராக்’ எனப் பிரபலமாக அறியப்படும் டுவைன் ஜான்சனிடம் ஒருமுறை ஆட்டோகிராஃப் கேட்டேன். அதற்காக சில மணிநேரம் காத்திருந்தேன். அவர் என்னிடம் வருகையில் என் குழந்தைக்கு ஆட்டோகிராப் கேட்கிறேன் என நினைத்துக்கொண்டு, `உன் தந்தை சிறந்த மனிதர்’ என்று எழுதினார். அவருக்கு 52 வயது இருக்கும், எனக்கு 26…
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் `Gen Z’ அதாவது 2k கிட்ஸ் உண்மையிலேயே வயதானவர்களாகத் தெரிகிறார்கள். நான் உங்களிடம் பொய் சொல்லப்போவதில்லை’’ என்று பேசிப் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வைரலானது. பலரும் இதைப் பார்த்து உண்மை எனக் கூறி வருகின்றனர்.
இது குறித்து நொய்டாவில் உள்ள தோல் மருத்துவர் பரினீதா மரியா கூறுகையில், “ஓரளவிற்கு இது உண்மை தான். வயதாவதைத் துரிதப்படுத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இருந்தாலும், 2k கிட்ஸ் வயதானவர்களாகத் தெரிவதற்கு சில காரணங்கள் உள்ளன. இவர்கள் சருமத்துக்கான பொருள்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
உங்களுக்குத் தேவையில்லாத அளவுக்கு அதிகமான பொருள்களைப் பயன்படுத்தும்போது, சரும பிரச்னைகள் ஏற்படலாம்; அது உங்களை வயதானவராகத் தோன்ற வைக்கலாம்’’ என்று கூறியுள்ளார்.
இருந்தபோதும் `Gen Z’ அல்லது 2k கிட்ஸுக்கு சீக்கிரமே வயதாகிறது என்பதற்கு எந்தவித அறிவியல் கண்டுபிடிப்புகளும் இல்லை.
`90’s கிட்ஸ் இளமையாகவும், அவர்களை ஒப்பிடுகையில் 2K கிட்ஸ் வயதானவர்கள் போல இருக்கிறார்களா… நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், கமென்டில் சொல்லுங்கள்!