மக்களவையில் `தென்னிந்தியா' தனி நாடு கோரிக்கை வைத்த கர்நாடக காங் எம்.பி- என்ன சொல்கிறார் சிவக்குமார்?

நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

அதில் உரையாற்றிய கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி டி.கே சுரேஷ், “பட்ஜெட்டில் தென்னிந்தியாவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவுக்குச் சேர வேண்டிய நிதி, வட இந்தியாவிற்கு விநியோகிக்கப்படுகிறது.

தேஜஸ்வி சூர்யா

இந்தி பேசும் வட மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் எனப் பிரித்துப் பார்க்கப்படுகிறது. மத்திய அரசிடமிருந்து கர்நாடகாவுக்கு போதிய நிதி கிடைக்கவில்லை. எனவே, `தென்னிந்தியா’ என்ற தனி நாடு கோரிக்கை விடுப்பதைத் தவிர, தென்னிந்தியர்களுக்கு வேறு வழியில்லை” எனப் பேசினார்.

டி.கே.சுரேஷின் கருத்துக்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, “காங்கிரஸ் கட்சிக்கு, பிரித்தாளும் கட்சி என்ற வரலாறு இருக்கிறது.

அதைப் பயன்படுத்தி, எம்.பி டி.கே.சுரேஷ் மீண்டும் வடக்கையும் தெற்கையும் பிரிக்க வேண்டும் என்று நாடகமாடுகிறார். ஒருபுறம், அவர்களின் தலைவர் ராகுல் காந்தி தனது ‘ஜோடோ’ யாத்ராக்கள் மூலம் நாட்டை ‘ஒருங்கிணைக்க’ முயல்கிறார், மறுபுறம், அந்தக் கட்சியின் எம்.பி தேசத்தை உடைப்பதில் மும்முரமாக இருக்கிறார். பிரித்து ஆள வேண்டும் என்பது காங்கிரஸின் யோசனை. இது காலனித்துவவாதிகள் பின்பற்றியதை விட மோசமானது.

எம்.பி டி.கே.சுரேஷ் – டி.கே.சிவக்குமார்

கன்னடர்கள் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். மக்களவைத் தேர்தலில் அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம், காங்கிரஸ் முக்தபாரத் – காங்கிரஸ் இல்லாத நாடு பெறுவதை உறுதி செய்வோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் எம்.பி-யின் கருத்து குறித்து விளக்கமளித்த கர்நாடக காங்கிரஸ் தலைவரும், மாநில துணை முதல்வரும், டி.கே.சுரேஷின் டி.கே.சிவக்குமார்,

“நான் அகண்ட பாரதத்துக்காக இருக்கிறேன். ஆனால், சகோதரர் டி..கே சுரேஷ் மக்களின் கருத்தை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார். மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதால், தென்னிந்திய மக்கள் புறக்கணிக்கப்படுவதால் அப்படி நினைக்கிறார்கள். ஆனால், நாடு ஒன்றுதான். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாம் அனைவரும் ஒன்று. அதே நேரம் ஒவ்வொரு கிராமத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும்.” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.