ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கருமையா வீதியைச் சேர்ந்தவர் மாதேஷ்வரன். இவர் ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர். இவரின் மகன் அருண் ரங்கராஜன் (38). இவர் 2012-ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் பணிக்குச் சேர்ந்தார். பணியில் இருந்தபோது அதே மாநிலத்தில் பணியாற்றிய இலக்கியா கருணாகருன் என்ற பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை காதலித்து, திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஓர் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இருவரும் கர்நாடகா மாநிலத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிட மாறுதல் பெற்று வந்துள்ளனர்.
அருண் ரங்கராஜன் கலாபுர்கி மாவட்டத்தில் உள் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி-யாக பணியாற்றியபோது, அதே மாவட்டத்தில் பணியாற்றிய உதவி சப் இன்ஸ்பெக்டர் சுஜாதா (38) என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுஜாதாவின் கணவர் கண்டப்பாவும் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் குறித்து கண்டப்பா, அருண் ரங்கராஜனின் மனைவியான இலக்கியா கருணாகரனிடம் கூறி உள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அருண் ரங்கராஜன், கண்டப்பாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கண்டப்பா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அப்போது கர்நாடகா மாநிலத்தில் வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. இதற்கிடையே அருண் ரங்கராஜன் தார்வார் மாவட்ட உள் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி-யாக மாற்றப்பட்டார்.
அருண் ரங்கராஜனுக்கும், பெண் உதவி ஆய்வாளருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக, அவரின் மனைவி இலக்கியா கருணாகரன் குழந்தைகளுடன் கணவரை பிரிந்து சென்றார். அவர்களுக்கு விவாகரத்தும் ஆகியுள்ளது. இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு அருண் ரங்கராஜன் மற்றும் பெண் எஸ்.ஐ சுஜாதா ஆகியோர் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்துக்கு வந்துள்ளனர்.
அங்கு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த அருண் ரங்கராஜன், சுஜாதாவை தாக்கியுள்ளார். முகத்தில் காயமடைந்த சுஜாதா, கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சுஜாதா அளித்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல், ஆபாசமாகத் திட்டுதல், தாக்குதல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்த கோபி போலீஸார், அருண் ரங்கராஜனைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் விஜய் அழகிரி, அருண் ரங்கராஜனை சொந்த ஜாமீனில் விடுவித்தார். பெண் எஸ்.ஐ தாக்கப்பட்ட விவகாரத்தில், கர்நாடகா மாநில காவல்துறை கண்காணிப்பாளர் கைதுசெய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.