சாந்திபூர்: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஹேமந்த் சோரன் புதன்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், “வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறவே பாஜக எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைக்கிறது” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை புதன்கிழமை கைது செய்தனர். இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை நாடியா மாவட்டத்தில் உள்ள சாந்திபூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கம்பிகளுக்கு பின்னால் என்னை நிறுத்தினாலும், அதிலிருந்து மீண்டு வருவேன்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக அனைவரையும் சிறையில் அடைக்கிறது. வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆர்வமாக இருந்தபோதிலும் எங்களது முன்மொழிவை அவர்கள் நிராகரித்துவிட்டனர். நாங்கள் கூட்டணியை விரும்பினோம், ஆனால், அவர்கள் கூட்டணிக்கு உடன்படவில்லை. தேர்தலில் பாஜக வெற்றி பெற சிபிஐ(எம்)வ உடன் அவர்கள் இணைந்துள்ளனர்” என்றார்.
இதனிடையே, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “ஹேமந்த சோரன் கைது செய்யப்பட்டிருப்பது மத்திய பாஜக அரசின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி பழங்குடியினத் தலைவரை துன்புறுத்துவது தரம் தாழ்ந்தது. இந்தச் செயல் விரக்தியையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் தூண்டுகிறது.
பாஜகவின் கேவலமான தந்திரமான செயல்கள் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கிவிடாது. பாஜகவின் பழிவாங்கும் செயல்களுக்கு தலைவணங்காமல் உறுதியோடு நின்று இன்னல்களை எதிர்கொள்ளும் சோரனின் மன உறுதி பாராட்டுக்குரியது. அவரது உறுதிப்பாடு பாஜகளின் மிரட்டல் தந்திரங்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஓர் உத்வேகம்” எனத் தெரிவித்துள்ளார்.